பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

 
நாகனார்:(குறுக்கிட்டு)
எழிலி குழலி எவரே யாகினும்
வழுதியின் மனத்தைப் பழுதறத் தெரிந்து
செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்;
பாண்டியன்:கயல்விழி குழலியைக் கடிமணங் கொள்ள
அயில்வேல் வழுதி ஆவலன் என்பது
செந்தமிழ்ப் புலவர் தெளிகுவர் போலும்;
நாகனார்:தந்தம் மனம்போல் தக்கோர் மணங்கொளல்
முந்தை மரபே . . . . . . . . . . . . . . .
பாண்டியன்:. . . . . . . . . . முரணிலை பெரும;
மரபு மீறான் வழுதி யென்பதும்
அறிகுவம்; அவன்றான் அரசு நடாத்தும்
திறனும் நன்கு தெரிந்துளன் கொல்லோ?
நாகனார்:அம்புவி காக்கும் அறிவன் இவனெனச்
செம்புலச் சிறையார் செப்பக் கேட்டுளேன்;
மாதேவி:நயத்தகு பலனின் நலங்கெழு விதையிடக்
கசக்கும் பாகற் கணியோ நல்கும்?
வயப்புலி பூனையைப் பயத்தலும் உண்டோ?
பாண்யடின்:கொடியனென் றெம்மைக் குறிப்பில் உணர்த்தக்
கடும்புலி யென்று கழறினை கொல்லோ?
மாதேவி:போர்புரி மறவர்க்குப் புலியோ அரியோ
நேரெனப் புகல்வர் நேரிழை அறியேன்;
பாண்டியன்:(மெல்லிய குரலில் அரசியை நோக்கி)
நன்று நன்று நரியெனச் சொலாது
நின்றனை வேந்தி, நின்மகள் பெருமை
கேட்டலும் உளத்துக் கிளர்ந்தெழும் உணர்ச்சி
காட்டினை முகத்தில்; கண்மலர் துளிர்த்தன;
மாதேவி:சிறுவன் பெரும்புகழ் தெரிந்துளேன் எனினும்
பிறர்சொலக் கேட்டலிற் பேருவப் பன்றோ?