பக்கம் எண் :

42கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

2
கலைபயில் காதை

திண்ணையிற் பள்ளி வைத்தே
       தெளிவுறக் கற்கக் கல்விப்
பண்ணையென் றதனைக் கொண்டே
       பயின்றனர் அற்றை நாளில்;
எண்ணுடன் எழுத்தும் மண்ணில்
       ஏட்டினில் எழுதி ஓதிக்
கண்ணென மதித்துப் போற்றிக்
       கல்வியை ஓம்பிக் காத்தார் 1

பலர்புகழ் கல்வி கற்கப்
       பச்சிளஞ் சிறுவர் எல்லாம்
புலருமுன் விழித்துக் கொள்வார்
       புள்ளெனப் பறந்து செல்வார்;
மலர்விரல் கொண்டு மண்ணில்
       வடிவுற எழுதிக் காட்டி
அலர்சிறு வாயால் ஓதி
       அவரவர் முறைவைப் பாரே 2

எழுத்தறி வித்த ஆசான்
       இறைவனென் றெண்ணி வந்தார்
பழுத்தநல் லறிவும் அன்பும்
       பண்புடன் கருணை நெஞ்சும்
வழுத்திடுந் தோற்ற முங்கொள்
       வானவன்1, பயில வந்தோர்
தழைத்திடல் ஒன்றே கொண்டு
       தண்ணளி சுரப்பன் நன்றே 3


1கொள்வான் அவன்.,