தலைமகன் இவனுக் குற்ற தாழ்வினைக் கண்டு நொந்தாள் ‘இலைநிகர் இவனுக் கென்ன இவனைநான் உயர்வு செய்வேன் கலைமலி புலமை ஈவேன் கதிரொளி பரவ’ வென்று தலையளி சொரிந்து நின்றாள் தமிழன்னை அவனை நோக்கி 19 தன்னுளே தங்கி நின்று தனிநடம் புரியும் எங்கள் அன்னையாம் தமிழ ணங்கின் 1அடிகளை எண்ணுந் தோறும் இன்பெலாம் ஒருங்கு கண்டான் இவன்மனம் உருகக் கண்டான் அன்பெலாந் திரண்டு தாயின் ஆரமு துண்டு வந்தான் 20 பள்ளியில் ஆத்தி சூடி படித்ததை நினைந்து பார்த்தான்; தெள்ளிய இன்பம் இந்தச் சிற்றடி தருமேல் மற்றை உள்ளுறை இலக்கி யங்கள் ஊற்றெனச் சுரந்து நெஞ்சை அள்ளுமே எனநி னைந்தான் ஆய்ந்தனன் ஏடு தேடி 21 கிடைத்தது கம்ப நாடன் கிளத்திய காப்பி யந்தான் படித்தனன்; எங்கோ முன்னர்ப் படித்தது போன்று ணர்ந்தான்; முடித்திடத் தடைக ளில்லை மூழ்கினன் இலக்கி யத்துள்; அடித்தளத் தூறி வந்த அவாவினால் வளர்ந்து விட்டான் 22
1.திருவடி, பாடல்வரி. |