பக்கம் எண் :

ஊன்றுகோல்51

வாய்மொழி கல்லா ராகி
       வருமொழி மட்டுங் கற்றுத்
தாய்மொழி பழித்து வாழ்ந்து
       தமிழரென் றிருப்பா ருள்ளார்;
ஆய்மொழி பயின்றும் மற்றை
       அயன்மொழிக் கடிமை யாகும்
நாய்மனங் கொள்வார் தாமும்
       நந்தமிழ் நாட்டில் உள்ளார் 35

அறிவினை வளர்க்க வேண்டி
       அயன்மொழி ஒன்றைக் கற்றார்;
செறிதரும் அறிவைக் கொண்டு
       செந்தமிழ் பேணி நின்றார்;
நெறிதடு மாற வில்லை
       நெடும்புகழ்த் தமிழை என்றும்
குறைபடப் பேச வில்லை
       குலக்கதி ரேசர் மாதோ 36

பெற்றதாய் மொழியிற் பற்றும்
       பிறமொழி தனில்ம திப்பும்
உற்றிடல் வேண்டு மென்னும்
       உளக்குறிப் புணர்த்தல் போலப்
பெற்றதம் பெயரின் முன்னர்ப்
       பிறங்குதல் தமிழே யாக
மற்றது வடமொ ழிக்கண்
       மருவிய 1பெயரர்ஆனார் 37

இருமொழி நூல்கள் தேடி
       எப்பொருட் டாகக் கற்றார்?
பொருள்வரும் புகழும் வந்து
       பொலிந்திடும் என்றா கற்றார்?
ஒருசிறி தேனும் அவ்வா
       றுளத்தினிற் கருத வில்லை;
இருள்படர் வாழ்வில் இன்பம்
       எய்துதல் குறித்தே கற்றார் 38


1.பெயர் - கதிரேசன். கதிர் + ஈசன்.