பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

ஓதிய ஆத்தி சூடி
       ஊன்றுகோ லாகக் கொண்டே
நீதிநூற் படிகள் ஏறி,
       நெடியகாப் பியங்க ளென்னும்
வீதிசேர் ஊர்கள் சுற்றி,
       வீறுகொள் சங்கச் சான்றோர்
ஓதிய இலக்கி யத்தின்
       உலகெலாம் உலவி வந்தார் 39

சமயநூற் பொய்கை மூழ்கிச்
       சாத்திரக் கரைகள் கண்டார்;
அமைவுறும் வடமொ ழிக்கண்
       ணாறுகள் கடந்து வந்தார்
இமிழ்கடல் இலக்க ணத்தில்
       எழிலுற நீந்தி வந்தார்;
தமிழ்மொழிப் பெருமை யெல்லாம்
       சாற்றியே உலவி வந்தார் 40

பெற்றிடும் ஒன்றைக் கொண்டே
       பத்தெனப் பெருக்கிக் காட்டக்
கற்றவர் குடியில் வந்த
       கதிரேசச் செம்மல் தாமும்
பெற்றதைக் கொண்டே நாளும்
       பெருக்கினர் கல்விச் செல்வம்
சுற்றமும் நட்புந் தம்மைச்
       சூழ்ந்திட வாழ்ந்து வந்தார் 41