3 சபைகாண் காதை திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத் திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக் கட்ட, வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன் வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப் பந்தர் உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும் அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப் பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது பெருமைஎனப் பேணுவது வணிகர் நாடு! 1 கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர் கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டு விற்பர்;1 மடல்வரைந்து மனைக்கிழத்தி மனமகிழ மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத் தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகைமிகுத்துத் தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கி வந்து படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர் பலபலநல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர் 2 வழங்குதலை வழக்காக்கி வாழ்ந்திருந்த வணிகர்சிலர் புதியஅறஞ் செயநி னைந்தார் முழங்குதிரைக் கடல்கடந்து முயன்றுபெறுஞ் செல்வமெலாம் ஈந்துவக்க முனைந்து வந்தார்; எழுங்கலைகள் பலவளருங் கழகங்கள் எழிலறிவுக் கலைக்கோவில் எழுப்பி நின்றார்; பழங்கலைகள் பதிப்பித்தார் தமிழிசைக்குப் பயன்பட்டார் மாறிவருங் காலம் நோக்கி 3
1.வெளிநாட்டு வாணிகத்தைக் குறிக்கும் செட்டி நாட்டு வழக்குச் சொல். |