பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர்
       கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்;
பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால்
       பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்;
மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும்
       கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை
அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும்
       அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே? 4

நல்லறத்தை விலைகொடுத்து வாங்குவது
       நாகரிகச் செயலன்று, நாளும் ஓங்கும்
பல்வளங்கள் பெற்றவர்தாம் ஊருணிபோல்
       பழமரம்போல் மருந்துமரம் போல நின்று
நல்குதலை இயல்பாகக் கொளல்வேண்டும்
       நல்லவர்கள் ஒப்புரவென் றதைத்தான் சொல்வர்;
இல்லறத்தாள் மனமகிழத் தலையளித்தல்
       இயல்பன்றோ? விலைகொடுத்துப் பெறுவா ருண்டோ 5

சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை
       தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை;
மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதனை
       வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை,
மலைக்கோட்டு மாமுகிலும் பிறர் சொல்லை
       மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவ தில்லை;
தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து
       தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் 6

குலவிவருஞ் செல்வத்தைப் பெட்டகத்துட்
       குவித்தெடுத்துப் பார்ப்பதிலே என்ன கண்டோம்?
செலவுசெயத் தன்னலந்தான் வழியென்று
       தனித்துண்டு வாழ்வதிற்றான் என்னகண்டோம்?
பலவிருந்தும் உண்பதுவும் உடுப்பதுவும்
       1ஓரளவே; பகுத்துணர்ந்தால் உண்மை தோன்றும்;
உலவிவரும் 2இயல்பினதை ஒடுக்காமல்
       ஊர்நலத்துக் குதவிவரல் இன்ப மன்றோ? 7


1. ‘உண்பது நாழி உடுப்பன இரண்டே’ (புறம்), 2செல்வத்தை