56 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
கலைமகளின் திருவுளத்துக் குறிப்பறிந்து களிநடஞ்செய் திருமகளும் இயங்கி வந்தாள்; நிலைபெறுமோர் திருப்பணியை நிலையாத உலகத்தில் நிகழ்த்துவது நிதிபெற் றார்க்குத் தலையாய பணியாகும் எனுமுணர்வைத் தகுபொழுதில் கதிரேசர் விதைத்து விட்டார்; கலையாத ஆள்வினையர் பழநியப்பர் கருத்துக்குள் முளைத்தெழுந்து கதிர்க்கக் கண்டார். 12 அரசன்சண் முகனார்தாம் தலைமை பெற அவ்வூரில் அவையொன்று கூடிற் றாகப் பரசுபுலஞ் சான்றோரும் வந்திருந்து பற்பலநற் கருத்தெடுத்துப் பகர்தல் கேட்டுப் பரிவுகொடு நன்காய்ந்து பாராட்டும் படியாக முடிபொன்று படைத்து நின்றார்; தரிசுநிலம் விளைநிலமாய்ப் பயனளிக்கச் சபையொன்று காண்பதெனத் தீர்வு செய்தார் 13 நன்றாய்ந்து சீர்தூக்கி அவர்கண்ட நலம்பயக்கும் முடிபதனால் நானி லத்து நின்றார்ந்த புகழ்பரப்புஞ் சன்மார்க்க சபையொன்று நெடிதோங்கி நிற்கக் கண்டோம்; வென்றாரும் அறியாத தமிழ்தழைக்க விளைநிலம் போற் கல்லூரி யொன்று கண்டார்; சென்றாரும் எளிமையில்நூல் பயிலுதற்குச் செந்தமிழ்நூல் நிலையமொன்றும் தொடங்கி வைத்தார். 14 தமக்காகத் தமிழ்வளர்ப்பார் சிலருண்டு தமிழ்காக்கத் தமைவளர்ப்பார் சிலரும் உண்டு நமக்கோஇவ் வுண்மைநிலை தெரியாது நாவலிமை கொண்டவர்தாம் மயக்கி நிற்பர்; தமிழுக்கே தமிழ்வளர்த்தார் தமைமறந்தார் தம்பியையும் பழநியப்பர் பிணைத்துக் கொண்டார் நமக்காக வாழ்ந்துவரும் பரம்பரையை நாளெல்லாம் நினைந்துளத்தால் வாழ்த்து வோமே 15 |