மகனுக்குத் திருமணநாள் வாராதோ எனஈன்றார் வருந்தி நிற்க, தொகைமிக்க நூல்வல்லார் அதையுணர்ந்து ‘துயர் விடுக என்பின் வந்தார் மகிழ்வுக்கு வழிசெய்க மணஞ் செய்க மற்றெனக்குத் தேவை யில்லை; 1பகலுக்கும் பயின்றிடுவேன் சபைவளரப் பணிசெய்வேன்’ எனப்ப கர்ந்தார் 4 உறுபிணியாற் கால்தளர்ந்த கதிரேசர் உளந்தளரார், ஊன்று கோலின் பெருவலியால் நாடெங்கும் நடந்துலவித் தமிழ்பரப்பி, அதனைப் பேணாச் சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்மாந்தர் செயலாற்ற ஊன்று கோலாய் வருபவர்தாம் இவரென்று தெளியார்தாம் மகட்கொடைக்கு மறுத்து வந்தார். 5 கல்விவளம் பரப்புவதாற் கதிரேசர் புகழ்மணந்து காணும் செவ்வி செல்வவளங் குறியாகக் கொண்டோர்க்குச் செவ்வையுறத் தெரிய வில்லை; அவ்வளவில் ஒருமணத்தைப் பொருட்டாக அவர்மனத்திற் கொள்ளா ராகி எவ்வகையில் தமிழ்மணக்கச் செய்வமென எந்நாளும் எண்ணி நின்றார் 6 செல்வாக்குப் பரவிவரப் புகழ்ச்செல்வம் சேர்ந்துவர அத்தை வீட்டார் நல்வாக்குக் கொடுத்தார்கள் மகட்கொடைக்கு நாளடைவில் மாறி விட்டார் இல்வாழ்க்கைத் துணைவியென முதன்மகளை ஈவதென்று சொன்ன சொல்லை அல்வாக்கென் றாக்கியவர் வேறிடத்தில் அம்மகளைக் கொடுத்து விட்டார். 7
1.நாள் முழுமைக்கும் |