பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பெண்மைக்கு மதிப்பளித்துப் பேணிவரும்
       வணிகர்குலம் பெருகும் நாட்டில்
தண்மைக்கு மனந்தந்த மீனாட்சி
       ஆண்மைக்குத் தாம்ப ணிந்து
பெண்மைக்கு மதிப்பளித்தார், இல்லறத்தின்
       பெருமைக்கும் மதிப்ப ளித்தார்
உண்மைக்கும் கதிரேசர் உயர்வுக்கும்
       வாழ்வளித்தார் அதுவே வாழ்க்கை. 16

பேணிய குழலில் தோன்றும்
       பிசிரிலா இசையைப் போலக்
காணும்நல் வாழ்வு கண்டார்;
       கனிவுறும் இனிமை அன்பு
பூணுநல் லழகு தூய்மை
       பொலிசுவை அமைதி யாவும்
மாணுற அமைந்த வாழ்வு
       மணிபெறும் வாழ்வே யாகும் 17

பாவமுதின் எண்சுவையும் தோய்ந்தெ டுத்துப்
       பகர்கின்ற வாயுடையார்; படைத்து வைத்த
நாவமுதின் அறுசுவையும் நன்கு கண்டு
       நுகர்கின்ற நாவுடையார்; வடித்துத் தந்த
பூவமுதின் வாசகத்தைத் தூய்க்குங் காலைப்
       புனல்மல்கும் விழியுடையார்; மணியார் நாளும்
காவமரும் மலர்சூழூம் சுரும்பு போலக்
       காலமெலாம் சுவைவாழ்வு வாழ்ந்து வந்தார் 18

பாச்சுவையிற் குறைகாணின் எடுத்துச் சொல்லிப்
       பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல் போல
நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக் காட்டி
       நன்கடிசில் அமைவதற்குப் பக்கு வத்தை
1ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகு காணின்
       அடடாஓ எனநமக்கு வியப்புத் தோன்றும்;
நூற்சுவையார் எச்சுவையும் ஆழ்ந்து நோக்கும்
       நுண்ணறிவுப் புலனுணர்வுத் திறந்தான் என்னே! 19


1பெண்டிரை ஆச்சியென்பது செட்டிநாட்டு வழக்கு.