கற்பனை படைத்துக் காட்டும் கலையுல கதனில் வாழ்வோர் முற்படும் உலக வாழ்வின் நடைமுறை முற்றுந் தேறார்; கற்பனை ஏடு வேறு காண்குறும் நாடு வேறு சொற்பொருள் உண்மை உண்மை தொன்றுதொட் டியற்கை யாகும் 20 கண்முனம் படரா ஒன்றைக் கருத்தினுள் படைத்துக் கொண்டு நண்ணுமவ் வுலகிற் புக்கு நலிவெலாம் மறந்தே இன்பப் பண்ணுயர் பாடல் பாடிப் பறந்தவண் திரிவா னுக்கு 1மண்படும் வாழ்வா வந்து மனத்தினில் தோன்றி நிற்கும்? 21 தான்படுந் துயர்ம றப்பான் தன்னினந் தனைநி னைப்பான் வான்படு பொருளை யெல்லாம் வாரிவந் தவர்கள் வாழ்வு மேம்படக் கொடுப்பான் போல மேவுமப் பித்தன் கண்ணில் ஏன்படும் உலக வாழ்க்கை? ஈதவன் இயற்கை யாகும் 22 கற்பனைப் பித்தன் போலக் கதிர்மணி வாழ்ந்தா ரல்லர்; பிற்படும் புலவ ரெல்லாம் பெருமையே கொள்ளு மாறு நற்புகழ் அரசர் போற்ற நண்பரும் ஆகி நின்று பற்பலர் போற்றும் வண்ணம் பாரினைத் தெரிந்து வாழ்ந்தார் 23
1.மண்ணுலக வாழ்வு, மண்ணான வாழ்வு. |