பாட்டுக்கு நயமுரைக்குந் திறமே யன்றிப் பழையபரி மேலழகன் உரைக்குங் கூடக் கேட்டுவக்க நயமுரைக்குந் திறமை கொண்டார்; கிளர்ச்சிதரும் இவர்பேச்சைச் சுவைத்து ணர்ந்து கூட்டெழுந்த வேட்கையினால் அரங்கந் தோறும் கொலுவிருந்து தலைமையுரை நல்கும் வண்ணம் நாட்டவர்தாம் நிரல்படவே வேண்டி நிற்பர்; நாளெல்லாம் புகழ்பரப்பும் தலைமைப் பேச்சு. 16 கதிரேசர் தலைவரெனுஞ் சொல்லைக் கேட்டால் கற்றவரும் பேசுதற்குத் தயங்கி நிற்பர்; மதிவாணர் பேசுங்கால் தவறு காணின் மறுப்புரைக்கக் கண்ணோட்டஞ் சிறிதுங் காட்டார்; அதனாலே எழுவாரை மட்டந் தட்டல் அவர்கொள்கை எனக்கருதல் வேண்டா; பேச்சில் எதுவேனுங் குறைநேரின் தமிழுக் கன்றோ இழிவுவரும் எனுங்கருத்தால் மறுப்பு ரைப்பார். 17 புலவர்தமை இகழ்ந்துரைப்பார் எவரே யாகப் பொறுமைகொளார் மறுத்திடுவார் அச்சங் கொள்ளார்; பொலிவுதரும் பதவியினால் ஓர மைச்சர் புலவர்தமை இகழ்வுரையால் எள்ளல் செய்தார்; ‘இலகுதமிழ் ஆசிரியர், 1க.கா. என்ற இரண்டுக்கும் மேலொன்றும் அறியார்’ என்றார்; பலருமவண் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்; பண்டிதமா மணியுமதைப் பார்த்தி ருந்தார். 18 ‘அமைச்சர்தரும் மதிப்புரைகள் உண்மை; ஆனால் அதற்குமேல் இவர்தெரிந்த பொருள்தான் என்ன? நமக்குலகில் கடவுளொடு காதல் என்ற நற்பொருளை விஞ்சுகிற பொருள்தான் உண்டா? தமிழ்ப்புலவர், அரசியலில் ஆங்கி லத்தில் தனிப்புலவர், இவ்வகையில் யாரும் ஒன்றே; அமைப்பிதன்மேல் அறியாதார் கூட்டத் துள்ளே அமைச்சருந்தாம் ஒருவ’ரெனத் துணிந்து ரைத்தார் 19
1.க - கடவுள். கா- காதல். |