பக்கம் எண் :

92கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பண்டிதமா மணிமொழியைக் கேட்ட மக்கள்
       பாராட்டிக் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்;
தண்டமிழைப் பழித்தாலும் கைகள் தட்டித்
       தமிழ்மாந்தர் ஒலியெழுப்பி மகிழ்ந்தி ருப்பர்;
விண்டவரை மறுத்துரைத்துத் தாக்கும் போதும்
       வேகமுடன் கைதட்டி ஆர்ப்ப ரிப்பர்;
கண்டபடி கைதட்டிக் களித்தல் ஏனோ?
       கையிருக்குங் காரணத்தால் தட்டித் தீர்ப்பர். 20

கற்றார்க்குக் களிப்பருள அரங்கில் ஏறிக்
       கதிரேசர் பேசுங்கால் குழப்பஞ் செய்ய
உற்றார்க்கும், பொருள்பலவும் எடுத்து வீசி
       உடைத்தார்க்கும் கலங்கிலராய் அவரை நோக்கி
சொற்போர்க்கே யாம்1 அணியம்! வல்லீ ராயின்
       துணிந்தெழுக அமர்செய்வோம்; அல்லீ ரென்றால்
மற்போர்க்குத் தகுதியொன்றும் இல்லேம் என்று
       மதிகொடுத்த உரப்பெருக்கால் உரைத்தார் அன்று 21

கனன்றெழுந்து தமையீன்ற தாய கத்தின்
       கால்விலங்கை உடைப்பதற்குக் கல்லு டைத்தார்;
முனைத்தெழுந்து வெள்ளையரை ஓட்டு தற்கே
       முந்நீரில் மரக்கலத்தை ஓட்டி நின்றார்;
சினந்தெழுந்து தந்நாட்டைச் சிறையின் மீட்கச்
       சிறைபுகுந்தார்; செக்கிழுத்தார்; தெக்க ணத்தார்
மனம் விழைந்து தாய்மொழிக்குந் தொண்டு செய்தார்
       மானமுள்ள தமிழனுக்குத் தெரியும் நன்கு. 22

இலக்கணநூல் பதிப்பித்தார், இலக்கியங்கள்
       இனிதாய்ந்து தெளிந்திருந்தார், குறளை நன்கு
துலக்கமுறக் கற்றுணந்தார், ஆங்கி லத்தில்
       தோய்ந்தெழுந்து மொழிபெயர்த்தார், பாடல் யாத்தார்,
குலத்தமிழர் வ.உ.சி. மனந்தி றந்து,
       ‘கூர்மதியர் மணிப்புலவர் தலைமை ஏற்றால்
விளக்குகிறேன் குறள்பற்றி’ என்றார்; என்றால்
       வியத்தக்க கதிரேசர் தலைமை என்னே! 23


1.ஆயத்தமாகவுள்ளோம்.