பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

இழிகதைகள் புன்மொழிகள் இவற்றைக் கூறல்
       இலக்கியமா? நகைச்சுவையா? புலமை தானா?
அழிசெயலே வேறன்று; பண்பு போற்றி
       அறிவுக்கு விருந்தாகக் கேட்போ ருள்ளம்
கழியுவகை மீதூர உயர்ந்த வற்றைக்
       கற்றவரும் வியந்துரைக்கச் சிரிப்புத் தோன்றப்
பொழிவதுதான் சுவையாகும் முயன்று பெற்ற
       புலமைக்கும் அழகாகும் சால்பும் ஆகும். 28

மண்டியவர் மனமகிழ மணியார் ஓர்நாள்
       மாமுகில்போற் சொன்மழையைப் பொழியுங் காலை
பெண்டிர்சிலர் பேசியிடை யூறு செய்யப்
       பேரவையிற் சிலரெழுந்து தடுத்துப் பார்த்தார்;
கண்டஇவர் ‘பெண்மணிகள் அவர்பே ராகும்
       கலகலவென் றம்மணிகள் ஒலியெ ழுப்பிக்
கொண்டிருத்தல் இயல்பன்றோ’ எனவு ரைத்தார்;
       கையொலிகள் அடங்கியபின் அமைதி கண்டார். 29

கற்றவர்கள் மெச்சுமரு ணாச லப்பேர்க்
       கவிவாணர் கதிரேச மாம ணிக்குச்
சொற்பொருளால் நலமிக்க பாடலொன்று
       சொல்லிவர வேற்பளித்தார்; அந்தப் பாட்டில்
‘சொற்பொழிவு நிகழ்த்திவருங் கூட்டந் தன்னிற்
       சுடர்மணியார் அரங்கிருந்து தொடங்கி விட்டால்
பற்பலரும் அங்காந்து செவிம டுத்துப்
       பாவையென அமர்ந்திருப்பர்’ என்று சொல்ல 30

செவிமடுத்த மாமணியார் முறுவ லித்துச்
       சிரித்தவையோர் மகிழ்ந்திருக்கப் ‘பலரும்’ என்று
கவிகொடுத்த சொல்லை இடைக் குறையாக் கொண்டு
       கற்பித்தார்; ‘பல்லுடையார் வாய்தி றந்து
செவிமடுப்பர் என்பதனால் எனக்குப் பற்கள்
       இல்லாத செவ்விதனைச் சிந்தை வைத்துக்
கவிதொடுத்தார் போலும்’ எனச் சொன்ன போது
       கையொலியும் வாயொலியும் நிரம்பிற்றங்கே. 31