6. யாப்பு 1. வெண்பா (குறள்-நேரிசை-இன்னிசை) ஈற்றடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராயும், காய்ச்சீரும் இயற்சீரும் வர, வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கொண்டு, மற்றைச் சீருந்தளையும் வராமல், செப்பலோசை உடையதாய், இறுதிச்சீர் ‘காசு-பிறப்பு-நாள்-மலர்’ என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் முடிவது வெண்பாவாகும். இது வெண் பாவின் பொது இலக்கணம் ஆகும். வெண்பா-வெள்ளைப்பா-முதற்பா என்பன ஒரு பொருளன. இவ் வெண்பா, குறல் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா எனப் பல வகைப்படும். (குறல் வெண்பா) குறள் வெண்பா, குறுகிய அடிகளால் (அஃதாவது இரண்டடி யால்) ஆகிய வெண்பாவாகும். “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு.” ( ஒரு விகற்பம்) “முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.” (இரு விகற்பம்) மேற்கண்ட குறல்வெண்பாக்களில் முன்னது, ஓர் எதுகையால் (ஒரு விகற்பத்தால்) வந்துள்ளது, பின்னது, ஈர் எதுகையால் (இரு விகற்பத்தால் வந்துள்ளது) |