மூன்று விகற்பமாய் வருதலும், மூன்றாம் அடியின் இறுதிச் சீர் தனிச்சொல்லாய் இரு விகற்பமாயும், பல விகற்பமாயும் வருதலும் எனப் பல வகைப்படும். “கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர்.’ இது, தனிச்சொல் இன்றி நான்கடியும் ஒரு விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும். “கடற்குட்டம் போழ்வர் கலவர் பகைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக் குட்டம் கற்றான் கடந்து விடும்.” இது, தனிச் சொல் இன்றிப் பல விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும். பிறவகை இன்னிசை வெண்பாக்களை வந்த வழிக் கண்டு கொள்க. இன்னிசை வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவது இன்னிசை வெண்பாவாகும். 2. ஆசிரியப்பா (பொது) ஆசிரியப்பா, பெரும்பாலும் ஈரசைச்சீர்களையும், அச் சீர்களாலாகிய அளவடிகளையும் கொண்டு, அகவலோசை தழுவி, முன்றடிச் சிறுமையும், பலவடிப் பெருமையும் உடையதாக வரும். ஆசிரியப்பா எனினும், அகவற்பா எனினும் ஒன்றேயாகும். இவ் வாசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா, நிலை மண்டில் ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில் ஆசிரியப்பா என நான்கு வகைப்படும். |