பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

(நேரிசை ஆசிரியப்பா)

“பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியு முண்டீன் டுலகுபுரப் புதுவே.”

இது நேரிசை ஆசிரியப்பாவாகும். நேரிசை ஆசிரிப் பாவில் (ஈற்றயலடி) ஈற்றடிக்கு முந்திய அடி மட்டும் மூன்று சீர்களைப் பெற்று வரும்.

(நிலைமண்டில் ஆசிரியப்பா)

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவன்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.’

இது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். நிலை மண்டில ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் நான்கு சீர்களைப்பெற்று வரும். மற்ற இரு ஆசிரியப்பாக்களை வரும் வழிக் கண்டுகொள்க.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:

ஆசிரியப்பாவில் பெரும்பாலும் எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்ட அளவடிகளாக வரும். ஈரசைச் சீர்களாகிய இயற்சீரும், சிறுபான்மை பிற சீரும் வரும். நேரொன்றாசிரியத் தளையும், நிலையொன்றாசிரியத் தளையும் பெற்று, அகவலோசை உடையதாக வரும். சிறுபான்மை பிறதளையும் விரவி வரும். இறுதிச்சீர் ஏகாரத்தால் முடியும். மூன்றடிச் சிறுமையும், பாடுவோன் ஆற்றலைப் பொறுத்துப் பலவடிப் பெருமையும் உடையதாக வரும்.

3. அலகிடுதல்

(சீர் பிரித்து, வாய்பாடு கூறி, தளை, எதுகை, மோனை எடுத்து எழுதுதல்)

செய்யுளை அலகிடுதலாவது, முதலில் செய்யுளில் அடி தோறும் உள்ள ஒவ்வொரு சீருக்கும் ‘நேர் நிரை’ என வருகின்ற அசைகளைப் பிரித்தல் வேண்டும். பிறகு, அங்ஙனம் அசை பிரிக்கப்பட்ட சீர்களுக்கு உரிய வாய்பாடுகளாகிய ‘தேமா புளிமா’