பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்121

என்பன போன்ற வாய்பாடுகளைக் கூறுதல் வேண்டும். அதன் பிறகு, நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் தட்டு வருகின்ற, இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை என்பன போன்ற தளைகளை எடுத்து எழுதுதல் வேண்டும். இறுதியாக, அடிதோறும் ஒவ்வொரு சீரிலும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் எதுகை வகைகளையும், முதல் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் மோனைவகைகளையும், அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற அடி எதுகை களையும், அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருகின்ற அடி மோனைகளையும் எடுத்து எழுதுதல் வேண்டும்.

அலகிடும் முறை வருமாறு:

“ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
ஊக்க முடையா னுழை.”

சீர் பிரித்தல்:

நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை
நேர்நேர் நிரைநேர் நிரை.

வாய்பாடு கூறுதல்:

தேமா கருவிளம் தேமா கருவிளம்
தேமா புளிமா மலர்.

தளை எழுதுதல்:

தேமா1 கருவிளம்2 தேமா3 கருவிளம்4
தேமா5 புளிமா6 மலர்.

1. இயற்சீர் வெண்டளை (மாமுன் நிரை)

2. இயற்சீர் வெண்டளை (விளமுன் நேர்)

3. இயற்சீர் வெண்டளை (மாமுன் நிரை)

4. இயற்சீர் வெண்டளை ( விளமுன் நேர்)

5. இயற்சீர் வெண்டளை ( மாமுன் நிரை)

6. இயற்சீர் வெண்டளை ( மாமுன் நிரை)