7. அணி 1. வேற்றுப்பொருள் வைப்பணி அஃதாவது, புலவர் தாம் கூறக் கருதிய பொருளை முன்பு கூறி, அதனை வலியுறுத்துவதற்கு உலகறிந்த வேறு ஒரு பொருளைப் பின்பு எடுத்துக்காட்டிக் கூறுவது, வேற்றுப் பொருள் வைப்பணி எனப்படும். “புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச் சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறைந்தான் புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார்.” ‘இருள் புறங்காட்டி ஓடும்படி அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியை வளர்க்கும் தேரை உடைய சூரியன் மறைந்தான்; புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலே தோன்றி இறவாமல் வாழ்கின்றார் யார்? ஒருவருமில்லை’ என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில் முன் இரண்டடியில் கூறப்பட்ட ‘சூரியன் மறைந்தான்’ என்ற சிறப்புப் பொருள், ‘உலகத்தில் தோன்றிய யாவரும் இறப்பது உறுதி’ என்று, பின் இரண்டியில் கூறப்பட்ட பொதுப் பொருளால் வலியுறுத்தப்படுகிறது. எனவே, இது வேற்றுப் பொருள் வைப்பணி ஆகும். இவ்வணி, பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் வலியுறுத்திப் பாடப்படும்பொழுது, முழுவதுஞ் சேறல், ஒருவழிச் சேறல் எனப் பல வகையாகப் பாடப்படும். |