124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
2. வேற்றுமையணி முதலில், ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து ஒப்புமை கூறி, பிறகு பிறிதொரு வகையில், கூற்றினாலாவது குறிப்பினாலாவது அவை தம்முள் வேற்றுமைப் படச் சொல்லுவது வேற்றுமையணி எனப்படும். “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்- ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.” ‘உதயகிரியில் தோன்றி, உயர்ந்த மக்கள் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகின் புற இருளைப் போக்குவது, ஒளியும் அழகும் பொருந்திய ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரை உடைய சூரியனாவான்; பொதியமiயில் தோன்றி, அறிவுடையோர் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களின் அகவிருளாகிய அறியாமையைப் போக்குவது, தனக்கு நிகரற்ற தமிழ் மொழியாகும்’ என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில், சூரியன், தமிழ் ஆகிய இரண்டும் மலையில் தோன்றுவதாலும், உயர்ந்த மக்கள் தொழ விளங்கவதாலும், இருளை அகற்றுவதாலும் ஒரு வகையில் இரண்டுக்கும் ஒப்புமை கூறப்பட்டுள்ளது; ஆனால் சூரியன் புற இருளைப் போக்கும் என்றும், தமிழ் அக இருளாகிய அறியாமையைப் போக்கும் என்றும் கூறுவதால், பிறிதொரு வகையில் வேற்றுமை கூறப்பட்டுள்ளது. எனவே , இப்பாடல் வேற்றுமையணியாகும். 3. இரட்டுற மொழிதல் (சிலேடை அணி) ஒரு வகையாய் நின்ற சொற்றொடர் இரு பொருள் தருமாறு கூறுவது, இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும். இவ் இரட்டுற மொழிதலுக்குச் ‘சிலேடை அணி ’என்ற பெயரும் உண்டு. இச் சிலேடை அணி, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். |