1. செம்மொழிச் சிலேடை ஒரே வகையாக நின்ற சொற்றொடர்கள், இரு பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்னும் அணியாகும். “ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடும் குலைதனக்கு நாணாது-சேடியே! தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு.” (இப்பாடல், தேங்காய்க்கும் நாய்க்கும் சிலேடை) தேங்காய்: மேலோட்டைப் பெற்றிருக்கும்; அதன் உட்பகுதி வெண்மையான பருப்பைப் பெற்றிருக்கும்; அனைவராலும் விரும்பப்படும்; குலையில் காய்திருப்பதற்குக் கோணாது. நாய்: விரைவாக ஓடும்; ஓடி இளைத்தால் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கும்; அதன் வாயின் உட்புறம் வெளுத்திருக்கும்; ஆதரிப்பவர் அனைவரையும் விரும்பும்; குரைப்பதற்குக் கொஞ்சங் கூட வெட்கப்படாது. இப்பாடலில் உள்ள சொற்றொடர்கள், பிரிவு படாமல் ஒரே வகையாக நின்று, தேங்காய்க்கும் நாய்க்கும் ஏற்பப் பொருள் கொள்ளுமாறு இருபொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் செம்மொழிச் சிலேடை எனப்படும். 2. பிரிமொழிச் சிலேடை ஒரேவகையாக நின்ற சொற்றொடர்கள், பிரிவு பட்டு நின்று வேறுபல பொருள்களையும் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும். “மன்னீரி லேபிறக்கும் மற்றலையீய லேமேயும் பின்னீச்சிற் குத்தும் பெருமையால்-சொன்னேன் கேள் தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரி யாம்.” (இப்பாடல், மீனுக்கும் பேனுக்கும் சிலேடை) |