126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
மீன், நிலைபெற்ற நீரிலே பிறக்கும். (மன்னீர் = மன் +நீர்) பேன், தலையில் நிலைத்துள்ள ஈரிலே பிறக்கும் (மன்னீர் = மன் + ஈர்) மீன், நீர் அலைகளிலே அங்குமிங்கம் சென்று மேயும். (மற்றலை = மற்று + அலை) பேன், நிலைபெற்ற தலையில் திரிந்து மேயும். (மற்றலை = மன் + தலை) மீன், பின்னால் இருந்தவாறு நீந்தி வந்து இரையைக் குத்தும். (பின்னீச்சு = பின்+நீச்சு) பேன், தலையிலிருந்து வாரி எடுத்த பிறகு ‘ஈச்சு, ஈச்சு’ என்னும் ஒலிக்குறிப்புடன் குத்தப்படும். (பின்னீச்சு = பின்+ஈச்சு) இப் பாடலில் உள்ள சொற்றொடர்கள் இங்ஙனம் பிரிவு பட்டு நின்று, மீனுக்கும் பேனுக்கும் சிலேடைப் பொருளைத் தருகின்றன. எனவே, இப்பாடல் பிரிமொழிச் சிலேடை எனப்படும். 4. மடக்கணி முதலில் வந்த சொல்லோ, சொற்றொடரோ, அடியோ மீண்டும் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி எனப்படும். மடக்கு எனினும் யமகம் எனினும் பொருள் ஒன்றே. “கொடியார் கொடியார் மதின்மூன்றும் கொன்ற படியார் பனைத்தடக்கை நால்வாய்க்-கடியார் உரியார் உரியார் எமையாள ஓதற் கரியார் கரியார் களம்.” ‘கொடியராயுள்ளவருடைய கொடிகள் பொருந்திய முப்புரத் தையும் எதிர்த்த தன்மையினையுடையார்;பனை போன்ற பெரிய துதிக்கையினை உடைய யானையின், அச்சத்தைத் தருகின்ற தோலை உடையார்; எம்மை ஆண்டுகோடற்குரியார்; யாவராலும் புகழ்தற்கு அரியார்; கரிய மிடற்றினை உடையார்’ என்பது இப்பாடலின் பொருள். |