துணைப்பாடநூல் பற்றி மதிப்புரை நான், பள்ளியிறுதி வகுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் துணைப் பாட நூலான ‘வீணை வித்தகன்’ என்ற நூலைப் பயின்றேன். அந்நூல் சிறந்த தமிழ் நடையைக் கொண்டுள்ளது. அவ் வாசிரியர் அக்கதையை யாத்த புலவர் பற்றியும், அந்நூல் பற்றியும் முதலில் விளக்கிப் பின் கதைக்குச் செல்வது அவருடைய வரலாற்று உணர்வைக் காட்டுகிறது. பெருங்கதையைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் சிறு கதையாக்கி, முக்கியப் பகுதிகள் அனைத்தும் இடம்பெறச் சுருக்கி, அமைத்திருப்பது அவரது தொகுத்துரைக்கும் தன்மைக்குச் சான்றாகும். ஒவ்வொரு காண்டத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பகுதிகளாக்கி ஒவ்வொரு பகுதிக்குள்ளும் சிறு தலைப்புக்களிட்டுக் கதையை வரைந்து செல்வது அந்நூலை அழகுபடுத்துகிறது. யாவும் சிறப்புற அமைந்திருந்தாலும், கதை மாந்தரின் பண்பு நலன்கள் சிறப்புற விளக்கப்பட்டிருந்தாலும், வருணனைகள் விளக்கி வரையப்பட்டிருந்தாலும், நகையூட்டும் செய்திகள் இடையிடையே காணப்பட்டாலும், புத்கத்தில் கதையின் சிறந்த பகுதிகளை விளக்கக்கூடிய படங்களை இடைஇடையே சேர்க்காத ஒரு குறையாகும். மேலும், அக்கதையின் மூலப் பாடல்களை மிகுதியாக மேற்கோளாகக் காட்டியிருக்கலாம். பொதுவாகப் பார்க்கின்றபொழுது, புத்தகம் நல்ல தகுதி யுடையதாகவிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ஆதலின், இதைப்போன்ற தமிh இலக்கியங்களை அறிமுகப் படுத்துகின்ற நூல்கள் மாணவர்களிடையே பல்கிப் பெருகுவதாக. 19. செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல் மாணவர்கள் ஒரு செய்தியைப் படித்தால் அதனை உளத் தமைக்க வேண்டும். ‘நீ படித்தது என்ன’ என்று கேட்டால், உடனே படித்ததை மொழிதல் வேண்டும். அதுபோலவே ஒரு செய்யுளைப் படிக்கின்றபொழுது அதன் கருத்துக்களைத் தொகுத்து மனத்தகத்தே நிறுத்தவேண்டும். அதனுடைய திரண்ட பொருளை எழுது என்றால், உடனே பாட்டின் பொருளைச் சுவைகுன்றாது எழுத வேண்டும். |