பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்155

உங்கள் பிரிவை எண்ணி நனிமிக வருந்துகிறோம். தங்கள் பிரிவைத் தமிழ் நெஞ்சங்கள் தாங்கா. அத் தமிழுள்ளங்கள் மகிழ்வுபெற இன்னுரை பகர்ந்து ஏகுக என மிகப் பணிவுடன் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னணம்,
செயலர்,
மாணவர் கழகம்.

22. வெள்ளி விழாக்காலப் புகழுரையும் மறுமொழியும்

வெள்ளி விழாவென்பது இருபத்தைந்தாண்டுகள் நிறை வெய்தியதைக் குறித்துக் கொண்டாடப் பெறுவதாகும். பொறுப்பில், அலுவலில் தொடர்ந்து இருபத்தைந்தாண்டுகளிருந்தால் வெள்ளி விழா நடைபெறும். பொது நிலையங்கள் மேலே குறிப்பிட்ட காலம் முடியச்செயற்படின் அவற்றிற்கும் வெள்ளிவிழா எடுக்கப்படும்.

காட்டாகத் தமிழ்ப் பேராசிரியராக இருபத்தைந் தாண்டுகள் பணியாற்றிய பண்டாரகர் திரு.வளவன் எம்.ஏ., எம்.ஒ.எல்., பி.எச்.டி. அவர்களுக்கு நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழ் அறிஞரொருவர் புகழ்ந்த புகழுரையும், அதற்கு அவரின் மறு மொழியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு வெள்ளிவிழாப் புகழுரையும், மறுமொழியும் எவ்வாறு நிகழ்த்தப் பெறுகின்றன என அறிந்து கொள்க.

புகழுரை:

நாளும் நல்லிசையால் நற்றமிழ் பரப்பும் நால்வர் வழி வந்த நல்லோய்! தித்திக்கும் தேன் தமிழை எத்திக்கும் பரப்ப - தனித் தன்மையும் உலக அரங்கில் உலவவிட ஒல்லும் வாயெல்லாம் உழைக்கும் உயரியோய்!

இருபத்தைந்தாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தமிழ் நலங்காத்த தகையோய்! நும்முடைய உயர் பணியால் ஒண்டமிழின் ஒளி உலக முழுதும் வீசுகிறது. அவ்வொளி நோக்கி எப்புலத்தாரும் இப்புலம் வருகின்றனர்.

தமிழ்ப் பற்றுக் குன்றிக் கிடந்த காலத்து, ‘விழி! எழு!! மொழியைப் பேணு’ என ஆர்த்தனை. தாய்மொழியைப் புறக்