பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்161

மொழிப் பயிற்சி

1. வாக்கியம் - பலவகைகள்

சொற்கள் தொடர்ந்து நின்ற, பொருள் விளக்கந் தருதலைத் தொடர்மொழி என்றும், சொற்றொடர் என்றும், வாக்கியம் என்றும் கூறுவர். அவ்வாக்கிய வகைகளைப் பற்றி இங்கே காண்போம்.

அ.செய்தி வாக்கியம் :

ஏதேனும் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.

எ-டு; “தமிழக முதலமைச்ச்h, பட்டமளிப்பு விழாப் பேருரை யைத் தமிழில் நிகழ்த்தினார்.”

இஃது, ஒரு செய்தியைத் தன்னகத்தே கொண்டு விளங்குவ தால், செய்தி வாக்கியம் எனப்படுகிறது.

ஆ.வினா வாக்கியம் :

வினாப் பொருள்பட வரும் தொடர், வினாவாக்கியம் எனப் படுகிறது.

எ-டு: வழியிற் கிடந்த இப் பொருள் யாருக்குரியது?

இத்தொடர் வினாப் பொருள்பட்டு முடிதலின் வினா வாக்கியம் எனப்படுகிறது.

இ.கட்டளை வாக்கியம் :

ஏவல் வினை கொண்டு முடியும் வாக்கியம், கட்டளை வாக்கியம் எனப்படும்.

எ-டு: சமுதாயத்தில் சிறப்பிடம் பெறக்கருதினால்? முதற்கண் பொருளைத் தேடு.

“தேடு” என்ற ஏவல் வினையைக் கொண்டிருத்தலின் இது கட்டளை வாக்கியமாயிற்று.

ஈ.உணர்ச்சி வாக்கியம்:

மெய்ப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூறப்படும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.