பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எ-டு: மானும் புலியும் ஒருதுறையில் நீர் அருந்தும் இந் நாட்டின் ஆட்சித் திறந்தான் என்னே!

‘வியப்பு’ என்னும் மெய்ப்பாட விளங்க உரைக்கப் படுதலின், இஃது உணர்ச்சி வாக்கியமாயிற்று.

இனி இவ்வாக்கியங்களை அவற்றின் அமைப்பு முறை கொண்டு கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

தனி வாக்கியம்:

“புலவன் இயற்கையிலிருந்தே கவிதையைப் பெறுகிறான்.”

இங்கு, ஒரெழுவாயும் ஒரு பயனிலையும் வர, வாக்கியம் முற்றுப் பெறுதலின், இது தனி வாக்கியம் எனப்படும்.

தொடர் வாக்கியம்:

“ஆசிரியர் வந்தார்; வினாக்களை விடுத்தார்; பாடத்தைத் தொடங்கினார்.”

இவ்வெடுத்துக் காட்டில், ஆசிரியர் என்னும் எழுவாய் வந்தார், விடுத்தார், தொடங்கினார் என்னும் மூன்று பயனிலை களைக் கொண்டுள்ளது. இத்தொடர் “ஆசிரியர் வந்து, வினாக்களை விடுத்துப் பாடத்தைத் தொடங்கினார்” என்று ஒரே தொடர்க்குரிய பொருளைத் தருதலின் தொடர் வாக்கியம் எனப்படும்.

கலவை வாக்கியம்:

செங்குட்டுவன், “பத்தினிக் கல்லைக் கங்கையிலே நீராட்டிக் கனகவிசயர் முடித்தலையி லேற்றிக் கொணர்க” என, ஆணையிட்டான்.

இவ்வெடுத்துக்காட்டில், “செங்குட்டுவன் ஆணையிட்டான்” என்பது தலைமை வாக்கியம். “பத்தினிக் கல்லைக் கங்கையிலே நீராட்டிக் கனகவிசயர் முடித்தலையிலேற்றிக் கொணர்க” என்பது சார்பு வாக்கியம். ஒரு தலைமை வாக்கியமும், சார்பு வாக்கியமும் கலந்து வருவது கலவை வாக்கியம் ஆகும்.

செய்வினை வாக்கியம்:

“திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்”

எழுவாய் செய்த செயலைப் பயனிலையாகக் கொண்டு முடியும் வாக்கியம், செய்வினை வாக்கியம் எனப்படும்.