பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்163

செயப்பாட்டுவினை வாக்கியம்:

“திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது”

செயப்படு பொருள் எழுவாயாக மாற, பயனிலையில் ‘படு’ என்னும் துணைவினை புணர்க்கப்பட்டு, செய்து முடிந்தது போலக் கூறுதல், செயப்பாட்டு வினை வாக்கியமாகும்.

உடன்பாட்டு வாக்கியம்:

“நான் புலால் உணவை விரும்பி உண்டேன்”

இவ்வெடுத்துக்காட்டு ‘நான்’ என்னும் எழுவாயின் தொழில் நிகழ்ச்சியை ‘உண்டேன்’ என்னும் உடன்பாட்டு வினையால் வெளிப்படுத்தலின், இஃது உடன்பாட்டு வாக்கியம் ஆயிற்று.

எதிர்மறை வாக்கியம்:

“நான் புலால் உணவை உண்ணேன்”

இவ்வெடுத்துக்காட்டு, ‘நான்’ என்னும் எழுவாயின் தொழில் நிகழாமையை ‘உண்ணேன்’ என்னும் எதிர்மறை வினையால் வெளிப்படுத்தலின், இஃது எதிர்மறை வாக்கியமாயிற்று.

நேர்கூற்று வாக்கியம்:

கைகேயி இராமனை நோக்கி, “பதினான் ஆண்டுகள் காட்டிலே வாழ்க” என்று கூறினாள். இவ்வெடுத்துக்காட்டில் கைகேயி வாய்மொழியை மாற்றாது அவ்வாறே கூறியிருத்தலின், இது நேர்கூற்று வாக்கியம் எனப்படும். கூறின செய்தி மேற்கோட் குறிக்குள் காட்டப்பட்டிருத்தலை நோக்குக.

அயற் கூற்று:

கையேயி இராமனிடம் பதினான்கு ஆண்டுகள் காட்டிலே வாழுமாறு கூறினாள். இவ்வெடுத்துக் காட்டில் மேற்கோள் குறி நீக்கப்பட்டிருத்தலையும், தன்மையிடம் படர்க்கையிடமாக்கப் பட்டிருத்தலையும், ‘வாழ்க’ என்னும் முற்று ‘வாழுமாறு’ என எச்சமாக்கப் பட்டிருத்தலையும் நோக்குக. இஃது அயற் கூற்று எனப்படும்.