164 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
2. வாக்கிய அமைப்பு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங்கள் நிற்கும் முறை தமிழ் மொழியில் எழுவாய் தொடக்கத்திலும் பயனிலை இறுதி யிலும், செயப்படுபொருள் இடையிலும் அமைவதே பெரு வழக்கு. எ-டு: எழுவாய் செயப்படுபொருள் பயனிலை பொன்முடி அறம் செய்தான். இவை முறை மாறி வருதலும் உண்டு. எ-டு: திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இங்கே, செயப்படு பொருள் தொடக்கத்திலும், எழுவாய் இடையிலும், பயனிலை இறுதியிலும் நிற்றல் காண்க. இயற்றியவர் என்னும் வினையாலணையும் பெயர், திருவள்ளுவர் என்னும் பெயர்ப் பயனிலையைக் கொண்டு முடிந்தது. வாக்கியத்தில் எழுவாய் வெளிப்பட்டு நிற்றலே பெருவழக்கு. எ-டு:நான் செல்வேன் நீ வருவாய் சிறுபான்மையாக எழுவாய் வெளிப்படாது தொடர் அமைதலும் உண்டு. அதனைத் தோன்றா எழுவாய் என்பர். எ-டு:வந்தேன்(நான் - தோன்றா எழுவாய்) வந்தாய்(நீ - ” ) வாக்கியங்களில் வரும் பெயரெச்சங்கள் பெயருக்கு முன்னும், வினையெச்சங்கள் வினைக்கு முன்னும் வரும். எ-டு:ஒடிந்த வாள் (பெயரெச்சத் தொடர்) நடந்து வந்தான்(வினையெச்சத் தொடர்) செயப்படு பொருளின்றி வாக்கியம் அமைதல் உண்டு. சிறுபான்மையாக எழுவாய் இன்றியும் வாக்கியம் அமைதல் உண்டு. ஆனால், எவ்வகையினும் பயனிலையின்றி வாக்கியம் நிரம்புதல் இல்லை. |