பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்169

மோபதேசம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் எனது கிருகத்தில் நடக்கிறபடியால், தாங்கள் பந்து மித்திரர்களுடன் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

இங்ஙனம்

சௌம்யநாராயணன்.

தனித் தமிழ் நடை: இலக்கண அமைப்பினின்றும் வழுவாது, வேற்றுச்சொல் விரவாது, தனித் தமிழ்ச் சொல்லே புணர்த்து எழுதப்படுவது தனித் தமிழ் நடையாகும்.

“மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே நினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும் போது, உலக இயற்கை என்னும் மலைக் குகைகளிலே அரித்தெடுத்துவந்த அருங்கருத்துக் களான பொற்றுகள், இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்தே சிதர்ந்து மின்னிக் கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற் சிதர்களை எல்லாம் ஒன்றாய்ப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பி லிட்டு உருக்கிப் பசும்பொற்ற பிண்டமாகத் தருவதே பாட்டு என்று அறிதல் வேண்டும்.”

-மறைமலையடிகள்.

செந்தமிழ் நடை: வேற்றுச் சொல் விரவாது, தமிழ்ச் சொற்களால் ஒசை நயம்பட எழுதுவது செந்தமிழ் நடையாம்.

“அப்போது சேய்மையில் ஒல்லென ஓர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது முன்னரே கடுங்காற்று வேக மாய்ச் சுழன்று வீசத் தலைப்பட்டது. விண்ணுக்கடங்காமல் வெற்புக் கடங்காமல் வீசிய புயல்காற்றின் வெம்மையால் மலைப் பொருள்கள் எல்லாம் மயங்கிக் சுழன்றன. அக்கடும் புயலின் வேகத்திற்கு ஆற்றாது மலையே நிலைகுலைந்தது.”

-ரா.பி.சேதுப்பிள்ளை.

கொடுந்தமிழ் நடை: செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் வழங்குஞ் சொற்களால் தொடுக்கப்படுவது. இது பெருவழக்காயில்லாமையானும், சிறப்பின்மையானும், மாணர்க் கர்க்கு இந்நடை வேண்டாததாகலானும் எடுத்துக்காட்டுத் தரப்பட வில்லை.