பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்177

12. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் (விரிவாக)

தமிழ் மொழியில் புணர்ச்சியிலக்கணம் பொருட் செறிவு மிக்கது. ஆதலின் அதனை நன்கு விளங்கிக் கற்று எழுதப் புகுதல் மாணாக்கர் கடனும். எனவே ஈண்டு வல்லெழுத்து மிகும் இடங் களும், மிகா இடங்களும் தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. மாணாக்கர் கற்றுப் பயன் பெறுவாராக.

1. அ,இ,உ என்னும் சுட்டெழுத்துக்களின் முன்னும் ‘எ’ என்னும் வினா எழுத்தின் முன்னும் வருமொழியில் வல்லினம் வந்தால் மிகும்.

எ-டு:அ+ கோயில்=அக்கோயில்

இ + பள்ளி=இப்பள்ளி

உ + தென்னை=உத்தென்னை

எ + சார்பு=எச்சார்பு

2. சுட்டெழுத்துக்களின் திரிபுகளாகிய ‘அந்த’, ‘இந்த’ என்பவற்றின் முன்னும், ‘எ’ என்னும் வினாவெழுத்தின் திரிபாகிய ‘எந்த’ என்பதன் மூன்னும் வல்லினம் மிகும்

எ-டு:அந்த + கொடி=அந்தக் கொடி

இந்த + சோலை=இந்தச் சோலை

எந்த + பாதை=எந்தப் பாதை

3. அப்படி, இப்படி, எப்படி என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும்.

எ-டு:அப்படி + பேசினான்=அப்படிப் பேசினான்

இப்படி + பார்=இப்படிப் பார்

எப்படி + சொல்வாய்=எப்படிச் சொல்வாய்

4. இடம் பொருள் உணர்த்தும் அங்கு, இங்கு, எங்கு என்ப வற்றின் முன்னும் வலி மிகும்

எ-டு:அங்கு + சென்றான்=அங்குச் சென்றான்

இங்கு + பார்த்தான்=இங்குப் பார்த்தான்

எங்கு + கண்டாய்=எங்குக் கண்டாய்

5. மேலும், இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும்.