பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

முதலியனவாகத் தொடர்ந்து நின்று, வேற்றுமையில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருதல் காண்க.

3. பொதுமொழி

எட்டு, தாமரை, வேங்கை
எழுந்திருந்தான், வந்திருந்தான்

இவ் வெடுத்துக் காட்டுக்களில் ‘எட்டு’ ‘தாமரை’ ‘வேங்கை’, என்பன ஒரு மொழியாய் நின்று எட்டு என்ற எண்ணிக்கையையும், நீர்ப் பூவையும், புலியையும் உணர்த்தி ஒரு பொருள் தருகின்றன.

‘எழுந்திருந்தான்’ என்பது, ‘எழுந்தான்’ எனவும், ‘வந்திருந்தான்’ என்பது, ‘வந்தான்’ எனவும் ஒரு மொழியாய் நின்று ஒரு பொருள் தருதல் காண்க.

இனி ‘எட்டு ’ என்பது ‘எள்+து’எனத்தொடர் மொழியாய் நின்று, ‘எள்ளை உண்பாய்’ எனவும்,’தாமரை’ என்பது ‘தா+மரை’ எனத் தொடர் மொழியாய் நின்று, ‘தாவுகின்ற மரை’ எனவும், ‘வேங்கை’ என்பது ‘வேம்+கை’ எனத் தொடர் மொழியாய் நின்று, ‘வேகின்ற கை’ எனவும் தொடர்மொழி களாய்ப் பல பொருள் தருதல் காண்க. (த-உண்பாய். மரை-மான்)

‘எழுந்திருந்தான்’ என்பது ‘எழுந்து+இருந்தான்’ எனத் தொடர் மொழியாய் நின்று, ‘எழுந்து பின் இருந்தான்’ எனவும், ‘வந்திருந் தான்’ என்பது ‘வந்து+இருந்தான்’ எனத் தொடர் மொழியாய் நின்று, ‘வந்து பின் இருந்தான்’ எனவும் தொடர்மொழிகளாய்ப் பல பொருள் தருதல் காண்க.

இலக்கண விதி: ஒருமொழிகளாவன, (தனிமொழி களாவன) பகாப்பதமேனும், பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒரு பொருளைத் தருவனவாம். தொடர்மொழிகளாவன, அவ்விருகைப் பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கில் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று, இரண்டு முதலிய பல பொருள்களைத் தருவனவாம். பொது மொழிகளாவன, ஒன்றாய் நின்று ஒரு பொருள் தந்தும், அதுவே தொடர்ந்து நின்று பல பொருள் தந்தும், இவ்விரண்டிற்கும் பொதுவாய் நிற்பனவாம்.