பக்கம் எண் :

பாடுங்குயில்கள்193

மொழியில் இருந்தன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. பத்திரங்கள், கடிதங்கள் முதலியவற்றுள் எதனையும் மறுநாளைக்கென ஒதுக்கி வைக்காமல் இவர் அன்றாடம் மொழிபெயர்த்து விடுவார்.

மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலாக உயர்நீதி மன்றம் ஒன்று இருந்தது. அது ‘சதர் கோர்ட்’ என்று வழங்கப்பட்டது. இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளை வழக்குரைஞர் மாவட்ட நீதி மன்றங்களில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவர். இவை யனைத்தும் ஆங்கில மொழியில் இருக்கும். அன்றைய வழக்குரை ஞர்களுள் பலர் தக்க ஆங்கிலப்புலமை பெறாத வர்கள். இத் தீர்ப்புகள் தமிழில் இருந்தால் அனைவருக்கும் பயன்படுமே என்று வேதநாயகர் கருதினார்; கருதிய அளவில் நில்லாது செயலளவிலும் காட்டத் தொடங்கினார். இத் தொடக்கமே பின்னர் நூல்வடிவம் பெற்றது. அலுவல் நேரம் போக எஞ்சிய நேரத்தையெல்லாம் இவர் நூல்கள் படிப்பதும் பாடல்கள் இயற்றுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டார்.

வேலையிழப்பும் மீட்பும்

கவிதையில் தோய்ந்த நெஞ்சம் பிற பணிகளில் ஈடுபடாது என்றும் சோம்பியிருக்கும் என்றும் சிலர் கூறுவர். ஆனால், கவிஞர் வேதநாயகரோ அதற்கு மாறுபட்டவர். ஏற்றுக்கொண்ட பணியில் இவர் சுறுசுறுப்பாகவே விளங்கினார்; எழுத்து வேலை மிகுதியாக இருந்தமையால், தமக்குத் துணையாக ஒருவரை அமர்த்திக்
கொண்டு, தம் பணியினைக் குறையின்றிச் செம்மையாகச் செய்துவந்தார். இச் சமயத்தில் மேஸ்தர் டேவிட்சன் என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் வேதநாயகரின் கடமையுணர்ச்சியை அறிந்து மகிழ்ந்து இவரிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்.

அப்பொழுது எப்படியோ தமிழ்நாட்டில் சமயப் பூசல் காரணமாகக் கலகம் ஏற்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட இரு சமயத்தாரும் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தது. அங்கு இவ் வழக்கு முடிவு பெறாத காரணத்தால் மாநில நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனால் இரு சமயத்தாரும் கொடுத்த விண்ணப்பங்கள், வழக்கு நடைபெறும் பொழுது சொல்லப்படும் கருத்துகள் ஆகிய அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டிய பொறுப்பு வேதநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.