2. மணிக்குயில் தேசிக விநாயகம் (கி.பி.1876 -1954) ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்லவேண்டுமானால், அந் நாட்டு மக்கள் நல்லவர்களாக விளங்க வேண்டும். மலை வளம், ஆற்று வளம் முதலிய வளங்களைக்கொண்டோ, விளைநிலம், சோலைநிலம் இவற்றின் செழிப்பைக்கொண்டோ மட்டும் ஒரு நாடு சிறப்புப் பெறுவதில்லை. மனவளங் கொண்ட மக்களைக் கொண்டுதான் அந்த நாடு, புகழுக்குரிய நாடென்று போற்றப் படும். மக்கள் பண்பாடு மிக்கவர் களாக வாழவேண்டுமானால், இளமைப் பருவத்திலேயே அவர்களைப் பண்படுத்தி வர வேண்டும். இளஞ்சிறார்களைப் போற்றி வளர்க்க மறந்த எந்த நாடும் ஏற்றம் பெறுவதில்லை, இவ்வுண்மையை நன்குணர்ந்து, இளஞ் சிறார் நெஞ்சங்களைப் பண்படுத்தி, மக்கட் பண்பை வளர்க்க வேண்டும் என்னும் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் மிகச் சிலரே. இத்தகைய சான்றோர்களுள் ஒருவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, கவிஞர்கள் தங்கள் நூல்களைப் புகழ்பெற்ற பெரியவர் களுக்கே காணிக்கையாக்குவது வழக்கம். ஆனால், கவிமணி தேசிகவி நாயகம் பிள்ளை தம் கவிதைத் தொகுப்பாகிய ‘மலரும் மாலையும்’ என்னும் நூலைச் சிறுவர் சிறுமியர்க்கே காணிக்கை யாக்கிக் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத் தியிருக்கின்றார். ‘செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்நூல் உரியதாய் என்றும் வாழ்கவே’ என்று இவர் தமது நூலில் எழுதியிருப்பதால், நாட்டின் இளம் பாலாரிடத்தே கவிமணி எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது நன்கு புலனாகும். இளந்தலையார் நலத்திலே அக்கறை கொண்டு விளங்கிய இப் பெருமகனாரைக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாவா? |