பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

அ.இளமைப் பருவம்

பிறப்பும் கல்வியும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தை அடுத்துத் தேரூர் என்னும் சிற்றூர் உளது. அவ்வூரில் வேளாண் மரபினர் சீருஞ் சிறப்புமாக வழிவழி வாழ்ந்து வருகின்றனர். அம் மரபில் சிவ தாணுப்பிள்ளை என்ற பெருமகனார் ஒருவர் பிறந்து, சிறந்து விளங்கினார். இவர் ஆங்கிலங் கற்றவர்; தமிழார்வம் மிக்கவர்; உப்பளத்தில் அரசுப் பணியாளராகப் பொறுப்பேற்று வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆதிலட்சுமி அம்மையார் என்பவர் வாழ்க்கைத் துணைவியாராக விளங்கினார். இவர்கள் செய்த நல்வினைப் பயனாகக் கி.பி.1876ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27ஆம் நாள் (தாது வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்) கவிமணி தேசிக விநாயகம் இவர்களுக்கு நன்மகனாகத் தோன்றினார்.

சிவதாணுப் பிள்ளையும் ஆதிலட்சுமி அம்மையாரும் தங்களுடைய ஒரே ஆண்மகவான இவரைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர். குழந்தைப் பருவங் கடந்து, கல்விப் பருவம் எய்திய தேசிக விநாயகம், தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்
பெற்றார். அப்போது தமிழ்நிலமாகிய நாஞ்சில் நாடு திருவாங்கூர் ஆட்சிக்குள் இருந்தமையால் , இவர் மலையாள மொழியையே கற்க வேண்டியவரானார். அம் மொழியைக் கற்று வந்தாலும், தமிழ்
மொழியில் ஒரு தனியார்வம், இவர் நெஞ்சத்தில் ஊறிக்கொண்டே
யிருந்தது. இடையறாது அந்த ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்தமையால், அது நிறைவேறுங் காலமும் வந்து சேர்ந்தது.

‘எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்’

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, எண்ணிய வண்ணம் இவர் தமிழ்ப் புலமையும் பெற்றார்.

தேரூரின் வட எல்லையில் உள்ள பெரிய ஏரியின் நடுவே ‘வாணன் திட்டு’ என்னும் பெயருடன் ஒரு தீவுத்திடல் இருக்கிறது. அத் திட்டிலிருக்கும் திருவாவடுதுறை மடத்தில் சாந்தலிங்கத் தம்பிரான் என்னும் பெரியார் தலைவராக இருந்தார். அவர் சமயத்