பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்21

இவற்றுள், ‘எல்லாம்’ என்ற பொதுப்பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களுக்கும் பொதுவாக வந்துள்ளது.

‘தான்’ என்பது, ‘அவன்தான்’ ‘அவள்தான்’, ‘அதுதான்’ என ஆண் பால், பெண்பால், ஒன்றன் பாலுக்குப் பொதுவாக வரும்.

‘தாம்’ என்பதும், ‘எல்லாம்’ என்பதும் ‘அவர்தாம்’, ‘அவை தாம்’, ‘அவரெல்லாம், ‘அவையெல்லாம்’’ எனப் பலர் பாலுக்கும், பலவின் பாலுக்கும் பொதுவாக வரும்.

‘தான்’, தாம், எல்லாம் என்பன திணைப்பொதுவே அன்றிப் பாற் பொதுவாகவும் வரும். அவற்றுள், ‘எல்லாம்’ என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங் களிலும் வரும்.

இலக்கண விதி: முதற்பெயராகிய நான்கு பெயரும், சினைப்பெயராகிய நான்கு பெயரும், சினைமுதற் பெயராகிய நான்கு பெயரும், முறைப்பெயராகிய இரண்டு பெயரும், தன்மைப் பெயராகிய நான்கு பெயரும், முன்னிலைப் பெயராகிய ஐந்து பெயரும், எல்லாம், தாம், தான் என்னும் மூன்று பெயரும், இவைபோல்வன பிறவும் இருதிணைக்கும் பொதுப் பெயர் களாகும்.

முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ்
சினைமுதற் பெயரொரு நான்கு முறையிரண்டுந்
தன்மை நான்கு முன்னிலை யைந்தும்
எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர்.

(ந.நூற்பா 282.)