பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

3. ஆகுபெயர்-அன்மொழித்தொகை

வேறுபாடு

(ஆகுபெயர்)

ஒரு பொருளுக்கு இயற்கையாய் அமைந்துள்ள பெயர், அதனோடு தொடர்புடைய வேறு பொருளுக்குச் தொன்று தொட்டு ஆகி வருவது ‘ஆகுபெயர்’ எனப்படும்.

அவ் வாகுபெயர், பொருளாகுபெயர், இடவாகுபெயர், காலவாகுபெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகு பெயர் முதலியனவாகப் பலவகைப்படும்.

‘தாமரை போலும் முகம்’ - இங்கே தாமரை என்ற முதற் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய சினையாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது ‘பொருளாகுபெயர்’ அல்லது முதலாகு பெயர் எனப்படும்.

‘உலகம் மகிழ்ந்தது’-இங்கே உலகம் என்ற இடத்தின் பெயர், அவ்விடத்தோடு தொடர்பு கொண்டு வாழ்கின்ற மக்களுக்கு ஆகி வந்துள்ளது. எனவே இஃது ‘இடவாகுபெயர்’ எனப்படும்.

‘கார்த்திகை பூத்தது’ - இங்கே கார்த்திகை என்னும் காலத்தின் பெயர், அக் காலத்தில் மலர்ந்த பூவுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது ‘காலவாகுபெயர்’ எனப்படும்.

‘வெற்றிலை நட்டான்’ - இங்கே வெற்றிலை என்னும் சினைப் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய கொடி என்னும் முதற்பொருளுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது ‘சினையாகு பெயர்’ எனப்படும் (சினைப்பெயர், முதற்பெயருக்கு ஆகிவந்தால், அது சினையாகுபெயர் எனப்படும். முதற்பெயர், சினைப் பெயருக்கு ஆகிவந்தால், அது முதலாகுப்பெயர் அல்லது பொரு ளாகு பெயர் எனப்படும்)

‘வெள்ளை உழுதது’ - இங்கே வெள்ளை என்னும் நிறப்பெயர், அந் நிறத்தினை உடைய காளைக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது ‘குணவாகுபெயர்’ அல்லது பண்பாகுபெயர் எனப்படும்.

‘பொங்கல் உண்டான்’ - இங்கே பொங்குதல் என்ற தொழிலின் பெயர், அத்தொழிலை அடைந்த உணவுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, இது ‘தொழிலாகுபெயர்’ எனப்படும். இங்ஙனமே மேலும் பல ஆகுபெயர்கள் வரும். வரும் வழிக்கண்டுகொள்க.