(அன்மொழித் தொகை) வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமத்தொகை, உம்மைத்தொகை ஆகிய இவற்றில் ஒன்றனடி யாகப் பிறந்து, இவையல்லாத வேறு சொற்களும் மறைந்து வருவது ‘அன்மொழித்தொகை’ எனப்படும். அன்மொழித்தொகை = அல் + மொழி + தொகை - அல்லாத மொழிகளும் தொக்கு நிற்பது.) வளைக்கை வந்தாள் இங்கே, ‘வளைக்கை’ என்பது ‘’வளையலை அணிந்த கையை உடையவளாகிய பெண் வந்தாள்’ என விரியும். அங்ஙனம் விரியும் பொழுது, ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபுடன், பெண் என்ற பிற சொல்லும் முன்பு மறைந்து நின்றமை தெரியவரும். எனவே, இஃது இரண்டாம் வேற்று மைத் தொகைப் புறத்துப பிறந்த அன்மொழித் தொகையாகும். இங்கு, ‘வளைக்கை’ என்பது, ‘வந்தாள்’ என்ற சொல்லால் பெண் என்பதை உணர்த்தி அன்மொழித் தொகையாகியது. இங்ஙனமின்றி வளைக்கை என்பது தனித்து நின்று, ‘வளையலை அணிந்த கை’ என்ற அளவில் விரியுமானால், அப்பொழுது அஃது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இங்ஙனமே பிற தொகைகளும் அமையும். இங்ஙனம், இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள, ஆறு வேற்றுமைத் தொகைகளின் புறத்தே, அன் மொழித் தொகை பிறக்கும். ‘தாழ்குழல் பாடினாள்’ - இது, தாழும் தாழ்ந்த-தாழ்கின்ற குழலினை உடைய பெண் பாடினாள் என விரியும். எனவே, இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (குழல் கூந்தல்) ‘கருங்குழல் சென்றான்’ - இது கருமையாகிய கூந்தலை யுடைய பெண் நின்றாள் என விரியும். எனவே, இது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். |