24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
‘துடியிடை நின்றாள்’ - இது, துடிபோலும் இடையினை உடைய பெண் நின்றாள் என விரியும். எனவே, இஃது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாகும். (துடி உடுக்கை.) ‘தகரஞாழல்’ - இது, தகரமும் ஞாழலும் கலந்துண்டாகிய சாந்து என விரியும். எனவே, இஃது உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (தகரஞாழல்-மணப் பொருள் கள்) ஆகுபெயருக்கும்-அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு 1. ஆகுபெயர், ஒரே சொல்லாக இருக்கும். அன்மொழித் தொகை, பல சொற்கள் சேர்ந்ததாக இருக்கும். 2. ஆகுபெயர், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலாயவற்றின் அடியாகப் பிறக்கும். அன்மொழித் தொகை, வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகையின் அடியாகப் பிறக்கும். 3. ஆகுபெயர், தொன்று தொட்டுத் தொடர்புடைய ஒன்றற்கு ஆகிவரும். அன்மொழித் தொகை, இடத்திற்கு ஏற்பப் புதிது புதிதாக அமைக்கப்பட்டு வரும். 4. பொதுவினைகள் கண்டேன்-சென்றேன் வாழ்க-உண்க ‘கண்டேன், சென்றேன்’ என்ற வினைச்சொற்களில் இறந்த காலமும், தன்மை இடமும் தெரிகின்றன. ஆனால், திணையும் பாலும் தெரியவில்லை. எனவே, இவ்வினைச் சொற்கள் இரு திணைப்பொது வினைகளாகும். வாழ்க அவன்-அவள்-அவர்-அது-அவை உண்க யான்-யாம்-நீ-நீவிர் மேற்கண்டவாறு ‘வாழ்க, உண்க’ என்னும் வியங்கோள் வினை முற்றுச் சொற்கள், இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும், ஒருமை பன்மைக்கும் பொதுவினைகளாக வரும். |