212 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
வந்தார்; உயர் நிலைப் படிப்பை முறையாகப் படித்து முடித்தார். பின்னர், இவர் கல்லூரியில் சேர்ந்தார்; கல்லூரியில் ஓராண்டே படித்தார். குடும்பப் பொறுப்பு மிகுதியாகவே படிப்பை நிறுத்தி விடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்தம் இருபத்தைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்க்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்தவர் உமையம்மை என்னும் பெயருடையவர் ஆவார். இவ்வம்மையார் நாகர்கோவிலை அடுத்துள்ள புத்தேரியில் பிறந்தவர்; நற்குண நற்செயல்கள் நிரம்பப் பெற்றவர். இல்லற வாழ்க்கை இனிதே நடைபெற்று வரும் போது, ஏதேனும் ஒரு பணியில் அமரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அரசுப் பணியாக இருந்தால் நல்லது என்று சிந்தித்தார். கவிமணி அடக்கமுடையவர்; பொறுமை மிகுந்தவர்; கருணையுள்ளங் கொண்டவர்; ஆராயும் பண்புடையவர்; தம் எண்ணங்களைக் கவிதையாகவும் கட்டுரையாகவும் பிறருக்கு எடுத்துரைக்கும் இயல்புடையவர்; சொல் வன்மையும் உடையவர். பொதுவாக நல்லாசிரியர் ஒருவர்க்கு வேண்டும் பண்புகள் அனைத்தும் இவரிடம் குடிகொண்டிருந்தன. அதனால் இவர் ஆசிரியப் பணியில் அமர்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். ஆசிரியத் தொழில் மிக மிகத் தூய்மை வாய்ந்தது. இவர் இயல்புக்கும் அதுவே ஏற்ற தொழிலாயிருந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆசிரியப் பணியை மேற்கொள்வதென்னும் முடிவுக்கு வந்த கவிமணி முதன்முதலில் கோட்டாற்றிலுள்ள தொடக்கப் பள்ளி யொன்றில் ஆசிரியராய் அமர்ந்தார், ஆசிரியர்க்குரிய நல்லியல்புகள் அத்துணையும் வாய்க்கப் பெற்றிருந்தமையால், அத் தொழிலில் இவர் சிறந்துவிளங்கினார். தொடக்கத்திலே இவர் இளஞ்சிறார்க்கு ஆசிரியராக அமர்ந்த காரணத்தால், அவர்களுடைய உளப்பாங்கை நன்கு அறிந்துகொண்டார். அதனால் தான் குழந்தைகளுக்காகக் கவிதை எழுதுவதில் இவர் ஒப்பற்று விளங் கினார். இவர் கற்பிக்கும் திறனும், குழந்தைகளிடம் காட்டும் அன்பும், எளிமையும், இனிமையும் மாணவர்களைக் கவர்ந்தன; நல்லாசிரியர் என்னும் புகழும் பரவியது. |