கலியாணம், கடிகாரம், கிளி, நாய், கோழி முதலிய தலைப்புகளில் குழந்தைகளுக்காகவே பாடப்பெற்ற பாடல்களும் இதில் உண்டு. சமூகக் கொடுமை களை அகற்றுவதற்காகப் பாடிய பாடல்களும் தத்துவக் கருத்துகள் அடங்கிய பாடல்களும் நம் அறிவுக்கு விருந்தாம். தமிழ்ப்பண்பாட்டின் நறுமணத்தை இம்மாலையில் நாம் நன்கு நுகரலாம். ஆசிய ஜோதி என்னும் நூல், ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துத் தமிழில் எழுதப் பெற்றது. இதனைப் படிப்பார்க்கு மொழிபெயர்ப்பாகவே தோன்றாது. மூல நூல் படிப்பது போலவே உணர்வு தோன்றம். இவருடைய மொழி பெயர்ப்புப் பாடல்கள் எல்லாமே இவ்வாறுதான் அமைந்திருக் கின்றன. பொதுவான கருத்துகளை வைத்துக் கொண்டு, தமிழ் மரபுக்கேற்ப இவர் பாடல்களை இயற்றுவார். மொழிபெயர்ப்பு என்ற நினைவே தோன்றாமல், தமிழ் மூலத்தைப் படிப்பது போலவே இருக்கு மாறு மொழி பெயர்ப்புப் பாடல் இயற்றுகின்ற இவருடைய பேராற்றலைச் சான்றோர் புகழ்ந்துரைக்கின்றனர். இந்நூல் புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது; உள்ளத்தை உருக்க வல்லது; கடவுள் பேரால் உயிர்ப்பலி கூடாது என்று கூறுவது. உமார் கயாம் பாடல்களும் மொழிபெயர்ப்பு நூலே. பாரசீகத்தில் பிறந்த கவிஞர் உமார் கயாம்; அவருடைய பாடல் களைப் புதுப் பொலிவுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கவிமணி. இப்பாடல்கள் இனிமைவாய்ந்தன; பொருள் மிக்கன. இப் பாடல்களைப் படிப்பவர்க்கு, வேறு உலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றும். நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்னும் கவிதை நூல் நகைச்சுவை நிரம்பியது. நாஞ்சில் நாட்டில் ஒரு வேடிக்கை யான வழக்கம் முன்பு இருந்துவந்தது. ஒருவருடைய சொத்து அவருடைய மக்களுக்கு உரிமையாகாது; அவர்தம் சகோதரி மக்களுக்கே, அஃதாவது மருமக்களுக்கே உரிமை யாகும். இதற்கு ‘மருமக்கள் தாயம்’ என்பது பெயர். இவ் வழக்கத்தால் பல கேடுகள் நிகழ்ந்தன. இம்முறையைக் கண்டிக்கும் வகையில் நகைச்சுவை பொருந்த இவரால் எழுதப்பெற்ற நூல் இது. தேவியின் கீர்த்தனங்கள் கவிமணி தமிழிசைக்குச் செய்த தொண்டாகும். ‘தேசிக’ என்பதிலுள்ள முதலெழுத்தையும் ‘விநாயகம்’ |