பக்கம் எண் :

216கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

என்பதிலுள்ள முதலெழுத்தையும் சேர்த்துத் ‘தேவி’ என்று கொண்டு, ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்னும் பெயர் வைக்கப்பெற்றுள்ளது. பத்திச் சுவை நிறைந்த நூல் இது.

உரைநடை நூல்கள்

கவிமணியின் உரைமணிகள் என்பது இவருடைய உரை நடைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். ‘காந்தளூர் சாலை’ என்பது சிறந்த ஓர் ஆராய்ச்சி நூல்.

கவிதைப் பண்பு

இவருடைய பாடல்கள் எளிய சொற்களால் ஆனவை; இனிமை நிறைந்தவை; படித்தாலும் கேட்டாலும் மனத்தை உருக்குபவை. அருஞ்சொற்களைக்கொண்ட பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். எனினும் சிறுவர் சிறுமியரை மனத்தில் வைத்துக்கொண்டு பாடியதாலும், அவர்களுக்காகப் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டமையாலும் எளிய சொற்களைக் கொண்டே இவர் பாடல்களை இயற்றினார். ஆயினும் உயர்ந்த கருத்துகளை அந்தப் பாடல்கள் உணர்த்தும். சிறுவர்க்கான பாடல்களைப் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி இன்புறுவர். ‘ரசிகமணி’ என்னும் சிறப்பினைப் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார். கவிமணியின் பாடலைப் பாடிப்பாடி உருகுவார்; நம்மையும் உருகவைப்பார்.

ஒருசமயம் கவிமணி சிரங்கினால் பெருந்துன்ப முற்றார். உடல் முழுவதும் சிரங்கு பரவியது. தொல்லை தாங்க முடிய வில்லை. கவிஞர் அல்லற் பட்டாலும் அந்த வேதனை பாட்டாகவே எழுந்தது. துயரத்தையும் நகைச்சுவை பொருந்தவே இவர் வெளியிட்டார். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பதை நன்கு உணர்ந்த கவிமணி, நகைச்சுவையுடன் வேதனையை வெளிப் படுத்திய அந்த வெண்பா இதுவே;

‘முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்திஒளி வீசு பதக்கமெலாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.’

பதக்கமென்று சிரங்குகளைக் குறிப்பிடுகின்றார். முத்து, பவழம், வயிரம், மாணிக்கம் முதலியவற்றை வரிசையாகப் பதித்து