வைத்த பதக்கமாம். அப் பதக்கம், இவருடைய தரங்கண்டு, சிரங்கப்பராயனால் கொடுக்கப்பட்ட பரிசாம். இதில் எவ்வளவு நசைச்சுவை பொருந்தியுளது! சிரங்கு தீர இவர் மருந்துண்டார்: உடலில் மருந்துகள் பூசினார். ஆயினும் சிரங்கு நீங்கவில்லை. அதற்கும் இவர் மற்றொரு வெண்பாப் பாடினார்: ‘உண்டமருந் தாலும் உடல்முழுவ தும்பூசிக் கொண்டமருந் தாலும் குணமிலையே - மண்டு சிரங்கப்பா ராய சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு.’ இத்தகைய அழகிய வெண்பாக்கள் பல பாடினார். எவ்வுயிர்க்கும் துன்பம் இழைத்தல் கூடாது என்னும் அருள் நெஞ்சம் அப்பொழுதே இவரிடம் அரும்பத் தொடங்கி விட்டது. படிக்கும் பழக்கம் ‘படிக்கும் பழக்கத்தை மனிதன் ஓரளவோடு நிறுத்தி விடு கின்றானே!’ இறக்கும் வரை கற்காமல் இருக்கின்றானோ! என்று வள்ளுவர் வருந்தியுரைக்கின்றார். கவிமணி அதனை நன்குணர்ந் தமையால் எப்பொழுதும் படித்துக்கொண்டே யிருந்தார். இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தபோதும், இவர் படிப்பதை நிறுத்தியதில்லை. ஊக்குவிக்கும் பண்பு வளர்ந்துவிட்ட எழுத்தாளர்கள், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டுவதைக் காண்பது அரிது. ஆனால், கவிமணியோ இளம் எழுத்தாளர்களைப் பாராட்டி, ஊக்கமூட்டுவது வழக்கம். கவிதை எழுதுபவர்களோ கட்டுரை எழுதுபவர்களோ, கதை எழுதுபவர்களோ தம்மிடம் வந்தால், குறைகளை எடுத்துக் காட்டி அவர்களுடைய ஊக்கத்தைக் குன்றச்செய்யமாட்டார். அவர்கள் எழுதியவற்றுள் நல்லன போற்றி, ‘இப்படித்தான் எழுதவேண்டும்; அது நன்றாய் இருக்கிறது; இது நன்றாய் இருக்கிறது; இன்னும் நன்றாய் எழுத வேண்டும்’ என்று சொல்லி, மேலும் மேலும் எழுதத் தூண்டுவார். இவ்வாறு பிறரையும் வளர்ந்துவிட எண்ணும் இயல்பு இவரிடம் மிக்கிருந்தது |