எழுபதாம் ஆண்டு விழா 1944ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், நாகர்கோவிலில் கவிமணியின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா மிக்க சிறப்புடன் நடைபெற்றது. இந்திய அரசில் அந் நாள் நிதியமைச்சராய் இருந்த ஆர்.கே.சண்முகனார் பெருமக்கள் பலருடன் நேரில் வந்து, கொங்கு நாட்டு மக்கள் சார்பில் கவிமணிக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்புச் செய்தார். சொந்த ஊரில் சிறப்பு சொந்த ஊரில் யாருக்கும் அவ்வளவு புகழோ பெருமையோ இருப்பது அரிது. ஆனால், கவிமணிக்கு இவர் பிறந்த ஊரில் எல்லையில்லாப் புகழ் இருந்தது. அவ்வூர் மக்கள் கூடிக் கவிமணியின் பெயரால் ஒரு மண்டபம் எழுப்பினர்; பெரும் பொருட்செலவில் கண்ணையும் கருத்தையும் கவரும்வண்ணம் கவிமணியின் வாழ்நாளிலேயே அதனைக் கட்டினர்; இவருடைய உளங்கனிந்த வாழ்த்தையும் பெற்றனர். நாகர்கோவில் நகரிலே பொதுமக்களின் நன் கொடையால் ‘கவிமணி நிலையம்’ என்னும் ஓர் அழகிய மண்டபமும் அதன்பின் உருவாகியுள்ளது. குரல் ஒடுங்கியது தமிழகம் முழுமையும் தன் இனிய குரல் ஒலியைப் பரப்பிக் கொண்டிருந்த மணிக்குயில், கி.பி.1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் நாள், தன் குரலைச் சிறிதுசிறிதாக ஒடுக்கிக் கொண்டது. குரலை ஒடுக்கிக் கொண்டாலும், பாடல்களிலே பதிவு செய்யப்பட்ட அந்தக் குரல், தென் பொதிகைத் தென்றலென நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது; நமது உள்ளங்களை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. |