பக்கம் எண் :

224கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

‘செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
தீது எனக்குப்பல் லாயிரம் சேர்ந்தன;
நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.’

பாரதியார் இவ்வாறு அக்காலக் கல்வி முறை பற்றிக் கூறியுள்ளார். கி.பி.1894 முதல் 1897 வரை இவர் அங்குப் பயின்றார்; ஐந்தாம் படிவம் வரை கல்வி கற்றார். அந் நாளில் திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழறிஞர் பலரின் தொடர்பு பாரதியார்க்கு ஏற்பட்டது. இவர் வண்டமிழிற் கவிதைகள் வரைந்து மகிழ்வார். இவரது பாட்டியற்றும் திறன் கண்டு தமிழன்னையின் தனிமகன் என்று அனைவரும் இவரைப் பாராட்டினர்.

பாரதியாரின் பாட்டுத்திறம் கண்டு பாராட்டிப் புகழ்ந்தவர் பலர்; இளமையில் இவ்வளவு புகழா என்று இகழ்ந்தவர் சிலர். பாரதியாருடைய நண்பர்களுள் காந்திமதி நாதப் பிள்ளை என்பவரும் ஒருவர். அவர் பாரதியாரிடம் அன்பு கொண்டிருந்தாலும், அவர் மனத்தில் அழுக்காறு அரசோச்சியது, ஒருநாள் அவர் பாரதியாரைத் தாழ்த்த எண்ணி, ‘பாரதி சின்னப் பயல்’- என்னும் ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பாப் பாடச் சொன்னார். பாரதியாரா அதற்கு அஞ்சுபவர்? இவர் அந்த இறுதியடியையே தக்க கருவியாகக் கொண்டு காந்திமதிநாதப் பிள்ளை நாணுமாறு செய்தார். இதோ அந்த வெண்பாவின் இறுதி இரண்டடிகள்.

‘காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்!’

‘கருமேகம் போல மனம் இருண்டு கிடக்கும் காந்திமதி நாதனைப் பார்! அதி சின்னப் பயல்! (மிகச் சிறியவன்)’ என்பது இதன் பொருள். காந்தி மதிநாதன் வெட்கித் தலைகுனிந்தார்.

திருமணம்

பாரதியாருக்குப் பதினைந்தாம் ஆண்டு தொடங்கியது. இவர்தம் தந்தையார் பாரதியாருக்குத் திருமணம் செய்துவைக்கத் துணிந்தார்; செல்லம்மாள் என்னும் நற்குண நங்கையை மண முடித்தார். இத் திருமணம் கி.பி. 1897இல் நடந்தது. நற்பண்புகள் நிரம்பிய அவ்வம்யைhர் பாரதியாரின் இயல்புக்கு ஏற்ப நடந்து குடும்ப வாழ்வுக்குப் பெருமை சேர்த்தார்.