பக்கம் எண் :

பாடுங்குயில்கள்225

தந்தையார் மறைவு

பாரதியாரின் தந்தையார் ஒரு பஞ்சாலை நடத்தி வந்தார். பஞ்சாலை பெரும் இழப்புக்கு உள்ளாகியது. இழப்பைத் தாங்காமல் உள்ளம் உடைந்த சின்னசாமி ஐயர் நோயுற்றார். அந்நோயே அவருக்கு இறுதியாயிற்று. கி.பி.1898ஆம் ஆண்டு உறவினர்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு இயற்கையொடு கலந்தார்.

காசி வாழ்க்கை

பாரதியாரின் அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருட்டிணசிவன் என்பவரும் பாரதியாரின் தந்தை இறந்த செய்தி கேட்டு எட்டையபுரம் வந்திருந்தனர். அவர்கள் பாரதியாரைக் காசிக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். காசிக் கல்லூரி ஒன்றில் பாரதியார் சேர்க்கப் பெற்றார். அங்கே இவர் வடமொழியும் இந்தியும் பயின்றார்; தேர்வில் வெற்றியும் பெற்றார். எனினும், ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்பதில் இவர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

அரசவைக் கவிஞர்

எட்டையபுர மன்னர், டில்லியில் நடைபெற்ற அரசாங்க விழாவிற்குச் சென்றவர், காசிக்கும் சென்று பாரதியாரைக் கண்டார்; தம்முடன் எட்டையபுரத்துக்கு வருமாறு அழைத்தார். பாரதியாரும் உடன்பட்டு எட்டையபுரம் வந்து சேர்ந்தார். மன்னரின் எண்ணத்திற்கிணங்கப் பாரதியார் அரசவைக் கவிஞரானார்.

ஒரு நாள் காலையில் அண்ணாமலை ரெட்டியாரைப் பற்றிய பேச்செழுந்தது. அவர் கழுகுமலை முருகன் மீது பழகு தமிழில் அழகொழுகக் காவடிச் சிந்து பாடியவர். இந்தக் காவடிச் சிந்து பொதுமக்களும் பாடத்தக்க எளிமை பொருந்தியது. பாரதியார் பாடல்களோ புலவர்களுக்கே விருப்ப மூட்டுபவை, ரெட்டியாரின் பாடல்களோ பொது மக்களைக் கவர வல்லவை, இவைபோன்ற பாடல்களைப் பாரதியாரால் பாட இயலாது என்று அங்கிருந்தோர் கூறினர். மன்னரும் அவையோர் கருத்தையே வழிமொழிந்தார். இதைக் கேட்ட பாரதியார் சிரித்தார். ‘இன்றே காவடிச் சிந்து பாடி வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.