226 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
பாரதியார் அன்று மாலை அரண்மனைக்குச் சென்றார். அவைப் புலவர்கள் அங்கில்லை அவர்களுக்கு ஆள் அனுப்பப் பெற்றது; வந்து கூடினர். பாரதியார் சிந்து பாடினார். ‘பச்சைத் திருமயில் வீரன் அலங்காரன் கௌமாரன் - ஒளிர் பன்னிரு திண்புயப் பாரன் - அடி பணிசுப்பிர மணியர்க்கருள் அணிமிக்குயர் தமிழைத் தரு பத்தர்க் கெளியசிங் காரன் - எழில் பண்ணும் அருணாசலத் தூரன்...’ இப் பாடலைக் கேட்ட அரசரும் புலவர்களும் அண்ணாமலை ரெட்டியாரோ பொது மக்கட்கு மட்டுமே பாடினார். பாரதியாரோ பொது மக்கட்கும் புலவர்கட்கும் பாடும் திறம் வாய்ந்தவர் என்பதை ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். ஆ.சென்னை வாழ்வு இதழாசிரியர் தருமம் மிகு சென்னை மாநகரம் வருக எனப் பாரதியாரை வரவேற்றது. சென்னையிலிருந்து அந் நாளில் செய்திகளைத் தாங்கிவந்த நாளிதழ் ‘சுதேசமித்திரன்’ என்பதாகும். பாரதியார் பால் பரிவு கொண்ட அவ்விதழின் ஆசிரியர் தமது நாளிதழின் துணையாசிரியராக இவரை அமர்த்திக் கொண்டார். பெருமையான பதவி; வருவாய் குறைந்த பணி. எனினும், அப் பணியை மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டார் பாரதியார். தேசிய இயக்கப் பணி நாட்டின் இழிநிலையை உணர்ந்தார் பாரதியார்; அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட மக்களுக்கு உணர்ச்சியூட்டக் கருதினார்; அதற்கேற்ற கருவியாகச் ‘சுதேச மித்திரன்’ நாளிதழைப் பயன்படுத்தினார். |