‘எளிய சொற்கள்; எளிய நடை; எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்; பொதுமக்கள் விரும்பும் மெட்டு’ - ஆகியவற்றைக் கொண்டனவாகவே இருந்தன இவருடைய பாடல்கள். சொல்லுக்கு மெருகேற்றிப் படிப்போரின் நரம்புக்கு முறுக்கேற்றி உணர்ச்சியூட்டும் இவர் கவிதைகள் மக்களைக் கிளர்ச்சி கொள்ளச் செய்தன. நாட்டு விடுதலை பற்றிய கவிதை களில் தீப்பொறி பறந்தது; படிப்போரின் மனத்தில் எழுச்சி பிறந்தது. கோழை வீரனானான்; முதியவன் இளைஞனானான். தமிழில் ஒரு மறுமலர்ச்சி தோன்றிற்று; தமிழர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாயிற்று. விடுதலை வேட்கையில் மக்களை வீறுகொள்ளச் செய்யும் பாரதியாரின் கவிதைகளைத் தம் நாளேட்டில் வெளியிடுவதற்கு அதன் ஆசிரியர் கலக்க மடைந்தார்; ஆங்கிலேயரின் பார்வை தமக்குத் தீங்கை விளைவிக்குமோ! என அஞ்சினார்; கவிதைகளின் உணர்ச்சிக் கடுமையைச் சற்றே தணிக்குமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோள் பாரதியாரைச் ‘சுதேசமித்திரன்’ அலுவலகத்திலிருந்து வெளியேறத் தூண்டியது. உடலுக்குச் சிறையிடலாம்; உள்ளத்திற்குச் சிறையிட முடியுமா? எண்ணத்திற்குச் சிறையிட்ட இதழைவிட்டு விலகிய பாரதியாரைத் திருமலாச்சாரியார் என்பார் எதிர்கொண்டு அழைத்துக் கொண்டார். அவர் பாரதியாரின் நண்பர்; நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர்; பாரதியாரை நாட்டு விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தார் இருவரும் கலந்துரையாடி ‘இந்தியா’ என்னும் இதழைத் தொடங்கினர். பாரதியாரே அதன் ஆசிரியர். கி.பி.1908இல் அவ்விதழ் தொடங்கப் பெற்றது. ‘சுதேசமித்திரன்’ தவழ்ந்த கைகளிலெல்லாம் ‘இந்தியா’ வீற்றிருந்தது. கவிதைகள் வெளியீடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கால் மக்கள் தம் உள்ளத்தைக் கொள்ளைகொண்டார் பாரதியார். அக் கவிதைகள் எல்லாம் நாட்டு மக்களின் கைகளில் எக் காலத்திலும் இருந்திட வேண்டுமென இவருடைய நண்பர்கள் விரும்பினர்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அம் முயற்சி கைகூடிற்று. |