228 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
கி.பி.1908இல் ‘சுதேச - கீதங்கள்’ என்னும் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதைத் தொகுதியின் முதற் பகுதி வெளியாயிற்று. செம்மல் சிதம்பரனார் சந்திப்பு ஓட்டப்பிடாரம் பெற்றெடுத்த சிங்கம், செம்மல் சிதம்பரனார் தூத்துக்குடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் கையிலும் ‘இந்தியா’ கொலுவீற்றிருந்தது. அவர் வீர சுதந்திரம் வேண்டி நிற்பவரானார். அந் நாளில் பாரதியாரும் சிதம்பரனாரும் ஒருவரையொருவர் நேரில் கண்டதில்லை. ஆனால், இருவரும் ஒருவர்மீது ஒருவர் உள்ளத்தால் நட்புக் கொண்டிருந்தனர். செம்மல் சிதம்பரனார் வழக்கொன்றின் பொருட்டுச் சென்னை செல்ல நேர்ந்தது. சிதம்பரனார் தம் அலுவல்களை முடித்துக்கொண்டு பாரதியாரைக் காணவேண்டும் என்னும் பேராவலொடு ‘இந்தியா’ அலுவலகத்துக்குச் சென்றார். திருமலாச் சாரியார்தாம் முதலில் தென்பட்டார். சிதம்பரனார் அவரிடம் தாம் பாரதியாரைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அவரோ மாடியை நோக்கி உரக்கக் கூவிப் பாரதியாரை அழைத்துத் ‘தூத்துக்குடியிலிருந்து ஒருவர் உங்களைக் காண வந்துள்ளார்’ என்று தெரிவித்தார். சிதம்பரனார் மாடிக்குச் சென்றார். ஒளி படைத்த கண்கள்; உறுதி கொண்ட நெஞ்சம்; முறுக்கிவிட்ட மீசை; முண்டாசுக் கட்டு - இவை யனைத்தும் கொண்ட பாரதியாரை அடையாளம் கண்டுகொண்ட சிதம்பரனார் பாரதியாருக்கு வணக்கம் தெரிவித் தார். யாரென அவர் வினவுமுன் சிதம்பரனார் ஓட்டப்பிடாரம்... எனத் தொடங்கினார். அந் நொடியே பாரதியார் ‘ஓ! உலகநாதப் பிள்ளை குமாரர் சிதம்பரமா!’ எனக் கூறி, அவரைக் கட்டித் தழுவினார். இருவரும் பல மணி நேரம் கலந்துரையாடினர். பின்னர் சிதம்பரனார் தம் ஊர் திரும்பினார். விடுதலைக் கிளர்ச்சி செம்மல் சிதம்பரனார் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கப்பல் ஓட்டி ஆங்கிலேயர்க்குப் போட்டியாக வாணிகம் நடத்தினார். அதனைத் தடுக்க முயன்ற ஆங்கிலேயர் தோல்வியே கண்டனர். அந் நேரத்தில் விடுதலைக் கிளர்ச்சி மேலோங்கியது. |