பக்கம் எண் :

பாடுங்குயில்கள்229

லாலா லஜபதிராய் மீது குற்றஞ் சாட்டிய ஆங்கில அரசு அவரை நாடு கடத்தியது. இதனால் இந்திய மக்கள் கொதித் தெழுந்தனர். ஆயினும் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இச் சமயத்தைப் பயன்படுத்தி செம்மல் சிதம்பரனாரையும், சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கில அரசு சிறைசெய்தது; விசாரணை செய்வது போல் பாசாங்குசெய்து, இறுதியில் சிதம் பரனார்க்கு இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்தது. விடுதலை வீரர் சிதம்பரனார் வெங்கொடுமைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் சந்திப்பு

இச் செய்தி சென்னையில் வாழ்ந்த பாரதியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போலப் பாய்ந்தது. பாரதியார் சென்னையிலிருந்து சிட்டெனப் பறந்து வந்தார்; சிதம்பரனாரைச் சிறைக்கம்பிகளுக்கிடையே கண்டு மனம் நொந்தார்; அவரைக் கட்டித் தழுவினார்; கண்ணீர் உகுத்தார். சிதம்பரனாரோ அஞ்ச வேண்டா என்றும், நாட்டுணர்ச்சியைப் பாட்டுணர்ச்சியால் எழுப்புமாறும். இனிச் சென்னையில் இருப்பது தீங்கை விளைவிக்கும் என்றும், எந்த வழியிலும் சிறை புகாமல் இருக்க வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார். ஆங்கில அரசின் அடக்கு முறைக் கரங்கள் தொடமுடியாத இடம் பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியாகும். அங்குப் பாரதியார் செல்லவேண்டும் என்றும், அங்கிருந்து கொண்டே ஆங்கில ஆட்சியை அடியோடு அகற்றும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் சிதம்பரனார் நெஞ்சம் நெகிழ்ந்து கூறினார். விழிகளிலே நீரருவி பாயப் பாராதியார் சிறைச் சாலையை விட்டு வெளியே வந்தார்.

‘இந்தியா’ தடுக்கப்பட்டது

பாரதியார் சென்னை மீண்டதும் ‘இந்தியா’ புதிய கூறுடன் வெளிவரத் தொடங்கியது. ஆங்கில எதிர்ப்பு முழக்கங்கள் எல்லாப் பக்கத்திலும் எதிரொலித்தன. ஆங்கில ஆட்சியின் அடக்கு முறைகள் அம்பலப்படுத்தப்பட்டன. கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகள் அடுக்கடுக்காக எடுத்து விவரிக்கப் பட்டன. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதையும், நூலோர்கள் செக்கடியில் நொந்து கிடப்பதையும் பாரோர் உணரப் பாரதியார்