பக்கம் எண் :

பாடுங்குயில்கள்233

துக்கு வரும் இந்தியா இதழ்களைக் கைப்பற்றி அழித்தனர்; பாரதியாருக்கு வரும் பணவிடைத் தாள்களைத் தடைசெய்தனர். இன்னும் செய்யத்தகாத இன்னல் என்னென்ன உண்டோ அனைத்தும் செய்தனர் இவ்வாறு மறைமுகமாக நடந்த இழிசெயல்களைப் பாரதியார் அறியார் இத்தகைய இக்கட்டான சூழலில் ‘இந்தியா’ நிறுத்தப்பட்டது

பாரதிதாசனார் தொடர்பு

புரட்சிக் குரல் கொடுக்கும் குயிலாகப் பொலிந்தவர் பாரதிதாசனார்; அவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம் என்பது. பாரதியார் புதுவையில் வாழ்ந்துவந்த போதிலும் இருவருக்கும் அறிமுகம் ஏற்படவில்லை. ஆயினும், பாரதியார் பாடல்களைப் பாரதிதாசனார் படித்து மகிழ்வதோடு தம் நண்பர்களுக்கும் பாடிக்காட்டுவார். பாரதியாரைப் பாராமலேயே அவர்மீது பற்று வைத்திருந்தார் பாரதிதாசன்

புதுவையில் நடந்த ஒரு திருமணத்திற்குப் பாரதியார் தம் நண்பர்களுடன் சென்றிருந்தார் பாரதிதாசனாரும் அத் திருமண வீட்டிற்கு வந்திருந்தார். திருமணம் இனிது முடிந்தது. நண்பர் சிலர் கூடினர்; கனக சுப்புரத்தினத்தைப் பாடுமாறு வேண்டினர். அவரும் மிகுந்த விருப்பத்தோடு, வெண்கலக் குரலில் பாடினார்.

‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? - என்றும்
ஆரமு துண்ணுற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?’

கனக சுப்புரத்தினம் குரல் ‘கணீர்’ என்று திருமண வீட்டில் எதிரொலித்தது. பாரதியார் தம் பாடலை ஒருவர் உணர்ச்சி பொங்கப் பாடுவதைக் கேட்டுத் தம்மை மறந்தார். பாடி முடித்ததும் பாரதியார் அங்கு வந்திருப்பதை நண்பர் சிலர் கனக சுப்புரத் தினத்தின் காதில் மொழிந்தனர். உடனே அவர் பாரதியாரிடம் சென்று வணங்கி நின்றார். பாரதியார் அவர் பாடிய திறத்தைப் பாராட்டினார்.

அன்று கொண்ட தொடர்பு இறுதிவரை உறுதியாக நின்றது. கனக சுப்புரத்தினம் அன்று முதல் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். புதுவையில் பாரதியார் இருந்த வரையில் பாரதிதாசனார் இவரைக் கண்மணிபோலக் காத்து வந்தார். வறுமையால் பாரதியார் வாடிய போதெல்லாம் உரிமை யோடு பாரதிதாசனார் உதவிசெய்தார்.